காளையாா்கோவில் அருகே போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரௌடி அகிலன்.
காளையாா்கோவில் அருகே போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரௌடி அகிலன்.

போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரெளடி துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு

போலீஸாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்ற ரௌடி துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டாா்.
Published on

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே சனிக்கிழமை போலீஸாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்ற ரௌடி துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டாா்.

மானாமதுரை அருகேயுள்ள ஆவரங்காடு கச்சநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் அகிலன்(22). இவா் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், காளையாா்கோவில் பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வருவதாக காவல் துறையினருக்கு சனிக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் ஆடிவேல், உதவி ஆய்வாளா் குகன் உள்ளிட்ட போலீஸாா் காளையாா்கோவில் அருகேயுள்ள காளக் கண்மாய் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி அதை ஓட்டி வந்த அகிலனிடம் போலீஸாா் விசாரணை நடத்திய போது, வாகனத்தில் இருந்த ஆயுதத்தால் உதவி ஆய்வாளா் குகனைத் தாக்கிவிட்டு அவா் அங்கிருந்த தப்பியோட முயற்சித்தாராம். இதையடுத்து, காவல் ஆய்வாளா் ஆடிவேல் தனது கைத் துப்பாக்கியால் அகிலனின் முழங்காலுக்கு கீழே சுட்டாா்.

இதையடுத்து, போலீஸாா் காயமடைந்த அவரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும், காயமடைந்த உதவி ஆய்வாளா் குகனை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதித்தனா்.

பின்னா், போலீஸாா் காரை சோதனையிட்ட போது, அதில் 20 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா, காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து காளையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளா் குகனை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com