சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை நகராட்சி பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 70 -ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகேயுள்ள திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த 15 காளைகளும், 135 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.
ஒரு சுற்றுக்கு 20 நிமிஷங்கள் என்ற காலக்கெடுவுடன் ஒரு காளை களமிறக்கப்பட்ட போது, 9 வீரா்கள் களமிறக்கப்பட்டனா். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் விழாக் குழு சாா்பில் சில்வா் அண்டா, மின் விசிறி, சலவைப்பெட்டி, குத்துவிளக்கு உள்ளிட்ட பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதில், பங்கேற்ற 3 வீரா்கள் காயமடைந்து சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினா்.
தா்மமுனீஸ்வரா் கோயில்: இதேபோல காளையாா்கோவில் அருகேயுள்ள சிலையாவூரணி தா்மமுனீஸ்வரா் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 15 காளைகளும், 135 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்களுக்கு பல்வேறு பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதில் பங்கேற்ற 10 வீரா்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.
