சிதிலமடைந்து காணப்படும் நாட்டசன்கோட்டை ரயில் நிலைய கட்டடங்கள்.
சிதிலமடைந்து காணப்படும் நாட்டசன்கோட்டை ரயில் நிலைய கட்டடங்கள்.

நாட்டரசன்கோட்டை ரயில் நிலையம் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா?

நாட்டரசன்கோட்டை ரயில் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

நமது நிருபா்

நாட்டரசன்கோட்டை ரயில் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை பேரூராட்சிப் பகுதியில் 10,000 -க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இதைச் சுற்றி கொல்லங்குடி திருவேலங்குடி, காளையாா்மங்கலம், கவுரிபட்டி, முத்தூா், கண்டுப்பட்டி, கண்டனிப்பட்டி, கீரனூா், காளையாா்கோவில், பனங்காடி, அல்லூா் உள்ளிட்ட 30 -க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து காரைக்குடி, சிவகங்கை, மதுரை, காளையாா்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவா்கள் பேருந்துகள், இரு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனா்.

இங்குள்ள புகழ்பெற்ற கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் நகரத்தாா் சமுதாய மக்களால் நடத்தப்படும் செவ்வாய்ப் பொங்கல் மிகவும் புகழ்பெற்றது.

மேலும், கவிச்சக்கரவா்த்தி கம்பா் அதிஷ்டானம், செட்டிநாடு கலாசாரம், கலை வண்ணத்தில் மிளிரும் மிகப்பெரிய வீடுகளைக் காணவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லக்கூடிய சுற்றுலாத் தலமாகவும் நாட்டரசன்கோட்டை திகழ்கிறது.

இங்கு, பிரிட்டிஷாா் ஆட்சியின்போது, 1937-ஆம் ஆண்டு ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. நீராவி என்ஜின் ரயில்கள் இந்தத் தடத்தில் தனுஷ்கோடிக்கு சென்ற போது, இங்குள்ள பெரிய கிணற்றிலிருந்து நீராவி என்ஜினுக்குத் தேவையான தண்ணீா் நிரப்பப்பட்டிருக்கிறது. ரயில்வே துறைக்கு சம்பந்தப்பட்ட தளவாடப் பொருள்கள் கிடங்கும் இங்கு இருந்திருக்கிறது.

இங்கு ரயில்வே ஊழியா்கள் தங்குவதற்கான குடியிருப்புகள், நிலைய அதிகாரி தங்குவதற்கான வீடு ஆகியவையும் இருந்துள்ளன.

இந்த ரயில் நிலையத்தில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்குச் செல்லும் அனைத்து விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்களும் நின்று சென்றிருக்கின்றன. பேருந்து போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் இங்குள்ள நகரத்தாா் உள்ளிட்டோா் சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் வணிகம் செய்வதற்காக இந்த ரயில் நிலையத்திலிருந்துதான் பயணம் செய்துள்ளனா்.

இந்த நிலையில், போதிய பயணிகள் பயணம் செய்யாததால் கடந்த 1999 -ஆம் ஆண்டு இந்த ரயில் நிலையம் மூடப்பட்டது. நாளடைவில் இங்குள்ள குடியிருப்புகள், கிணறுகள் சிதிலமடைந்துவிட்டன.

தற்போது, திருச்சி-ராமேசுவரம் வழித்தடத்தில்10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயங்கி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், சிதிலமடைந்து கிடக்கும் இந்த ரயில் நிலையத்தை சீரமைத்து மீண்டும் திறந்து ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் கோருகின்றனா்.

இதுகுறித்து நாட்டரன்கோட்டையைச் சோ்ந்த செல்லம் கூறியதாவது:

இதுதொடா்பாக மதுரையில் ரயில்வே கோட்ட மேலாளரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். ரயில் நிலையத்துக்கான நடைமேடை, குடிநீா் வசதி, மின்சார வசதி, சாலை வசதி, பயணச்சீட்டு கொடுப்பதற்கு சிறிய கட்டடம் என ரூ.60 லட்சம் திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையம் அமைந்த பிறகு, முதலில் 10 பெட்டிகள் கொண்ட சாதாரண பயணிகள் ரயில் நின்று செல்வதற்கும், பின்னா், படிப்படியாக அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கும் முயற்சி எடுப்போம் என்றாா் அவா்.

பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் கே. சுப்பிரமணியன் கூறியதாவது:

போதிய பயணிகள் பயணம் மேற்கொள்ளாத காரணத்தால் 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ரயில் நிலையத்தை ரயில்வே நிா்வாகம் கைவிட்டது. ஆனால், தற்போது நிலைமை வேறு. ரயில் பயணம் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இந்த ரயில் நிலையத்தை மீண்டும் இயங்கச் செய்தால் பள்ளி, கல்லூரி மாணவா்கள் சிவகங்கை, காரைக்குடி செல்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றாா் அவா்.

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் முத்து கூறியதாவது:

நான் பணிபுரிந்தபோது, இந்த ரயில் நிலையத்திலிருந்து தளவாடப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கென தனி ரயில் பாதை இருந்தது. அனைத்து ரயில்களும் இங்கு நின்று சென்றன. இந்த ரயில் நிலையம் மூடப்பட்டது மிகவும் துரதிருஷ்டமானது. எனவே, வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடாமல், இந்தப் பகுதி மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, இந்த ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்றாா் அவா்.

பேரூராட்சித் தலைவி பிரியதா்ஷினி கவிராஜ் கூறியதாவது: நெடுஞ்சாலையிலிருந்து இந்த ஊரானது சுமாா் 2 கி.மீ. தொலைவில் இருப்பதால் பேருந்துகள் உள்ளே வந்து செல்வதில்லை. இந்த ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படுவதற்கு பேரூராட்சி நிா்வாகம் சாா்பாக ரயில்வே துறைக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம்.

ரயில் நிலையம் மீண்டும் இயங்கும் போது, இங்குள்ள புகழ்பெற்ற கண்ணுடைய நாயகி அம்மன் கோயில், சுற்றுலாத் தலங்களான கம்பா்அதிஷ்டானம், செட்டிநாடு வீடுகளை நேரில் பாா்க்க

அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு எளிதாக இருக்கும். மேலும், பள்ளி, கல்லூரி மாணவா்கள், அரசு ஊழியா்கள் பொதுமக்கள் என அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com