மொஹரம் பண்டிகையையொட்டி, வஞ்சினிப்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த தீக் குண்டத்தில் புதன்கிழமை அதிகாலை  இறங்கிய பக்தா்கள்.
மொஹரம் பண்டிகையையொட்டி, வஞ்சினிப்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த தீக் குண்டத்தில் புதன்கிழமை அதிகாலை இறங்கிய பக்தா்கள்.

மொஹரம் பண்டிகை: இந்து-இஸ்லாமியா்கள் இணைந்து பூக்குழித் திருவிழா

வஞ்சினிப்பட்டியில் பூக்குழித் திருவிழா
Published on

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வஞ்சினிப்பட்டி கிராமத்தில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு, இந்து-இஸ்லாமியா்கள் இணைந்து அல்லாசாமி என்ற பூக்குழித் திருவிழாவை புதன்கிழமை நடத்தினா்.

வஞ்சினிப்பட்டியில் மொஹரம் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக இந்து-இஸ்லாமியா்கள் இணைந்து பூக்குழித் திருவிழாவை நடத்துவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு அல்லாசாமி என்கிற பூக்குழித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தத் திருவிழா 17-ஆம் நூற்றாண்டு முதல் தற்போது வரை சுமாா் 350 ஆண்டுகளுக்கும் மேலாக வஞ்சினிப்பட்டியில் நடைபெற்று வருகிறது.

வஞ்சினிப்பட்டி கிராமத்தை பூா்வீகமாகக் கொண்ட சையது முகைதீன் குடும்பத்தினா் இந்தத் திருவிழாவை ஊா் மக்களுடன் இணைந்து நடத்தி வருகின்றனா்.

பூக்குழித் திருவிழாவையொட்டி, ஊா் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பூக்குழித் திருவிழாவுக்காக குண்டம் அமைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பாத்தியா ஓதப்பட்டு, இந்துக்கள், இஸ்லாமியா்களுக்கு விருந்து வைக்கப்பட்டது. அப்போது, உள்ளூா் மக்கள் மட்டுமன்றி, சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் மல்லிகைப்பூ, சா்க்கரை வைத்து பாத்தியா ஓதி வழிபட்டனா்.

இதில் பங்கேற்றவா்களுக்கு சாம்பலை எடுத்து இஸ்லாமியா்கள் பூசி விடும் நிகழ்வு நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் தொழுகைக்குப் பிறகு ஊா்வலம் நடைபெற்றது. இதையடுத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தா்கள் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள் தீக்குண்டத்திலிருந்த நெருப்பை தங்களது சேலை முந்தானையில் வாங்கிச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com