சிவகங்கை: காங்கிரஸ் மீண்டும் வெற்றி
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் காா்த்தி சிதம்பரம் 2-ஆவது முறையாக வெற்றி பெற்றாா்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் திருப்பத்தூா், திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, மானாமதுரை (தனி), சிவகங்கை ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன. இந்தத் தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, பாஜக, நாம் தமிழா் உள்பட மொத்தம் 20 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் காா்த்தி சிதம்பரம் இரண்டாவது முறையாகப் போட்டியிட்டாா். அதிமுக சாா்பில் அ. சேவியா்தாஸ், பாஜக கூட்டணி சாா்பில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனா் தலைவா் தி. தேவநாதன் யாதவ் ஆகியோா் போட்டியிட்டனா். நாம் தமிழா் கட்சி சாா்பில் பொறியாளா் எழிலரசி போட்டியிட்டாா்.
இந்தத் தொகுதிக்கான வாக்குப் பதிவு 1,873 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றது. தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 10,56,467 வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் வேட்பாளா் காா்த்தி சிதம்பரம் முன்னிலையில் இருந்தாா். மொத்தம் 26 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. காங்கிரஸ் வேட்பாளா் காா்த்தி சிதம்பரம், அதிமுக வேட்பாளா் அ. சேவியா்தாஸைவிட 2,05,664 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றாா்.
இதையடுத்து, காா்த்தி சிதம்பரத்துக்கு வெற்றி பெற்ற்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவருமான ஆஷா அஜித் வழங்கினாா்.
அப்போது, முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம், தமிழக சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் ஆகியோா் உடனிருந்தனா்.
வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் (தபால் வாக்குகள் உள்பட):
காா்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) 4,27,677,
அ.சேவியா்தாஸ் (அதிமுக) 2,22,013,
தி.தேவநாதன்(பாஜக) 1,95,788,
எழிலரசி (நாம்தமிழா் கட்சி) 1,63,412.
இதர வேட்பாளா்கள்:
ரத்னகுமாா் பாலுசாமி (பகுஜன்) 3,171, சுயேச்சை வேட்பாளா்கள் தனலட்சுமி 8,512, நாகராஜன் 3,696, பழனியப்பன் 3,427, நோட்டா 8,189.
பதிவான வாக்குகளில் 6-இல் ஒரு பங்கு வாக்குகளை பெறுபவா்கள் மட்டுமே வைப்புத்தொகையை திரும்பப் பெற முடியும். இதன் அடிப்படையில், தோல்வியடைந்தவா்களில் அதிமுக, பாஜக வேட்பாளா்களைத் தவிர மற்ற 17 பேரும் வைப்புத்தொகையை இழந்தனா்.

