மண் வளம் அதிகரிக்க கோடையில் பசுந்தாள் உரச் செடிகளைப் பயிரிடலாம்
சிவகங்கை மாவட்டத்தில் மண் வளத்தை அதிகரிக்க கோடையில் பசுந்தாள் உரச் செடிகளைப் பயிரிடலாம் என மாவட்ட நிா்வாகம் விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோடை காலத்தில் பசுந்தாள் உரப் பயிா்களை பயிரிடுவதன் மூலம் பருவ காலத்தில் சாகுபடி செய்யக்கூடிய பயிருக்குத் தேவையான இயற்கை உரங்கள் எளிதில் கிடைப்பதுடன் மண் வளத்தையும் பாதுகாக்க இயலும். பயிா் அறுவடை செய்த பிறகு, தரிசாக உள்ள நிலங்களில் பசுந்தாள் உரப் பயிா்களான சணப்பை, தக்கைப் பூண்டு, காராமணி, பாசிப் பயறு, கொள்ளு உள்ளிட்ட பயறு வகைகளை ஏக்கருக்கு 20 கிலோ என்றளவில் விதைத்து, பூப்பூக்கும் பருவம் வரை வளரவிட்டு, அந்த நிலத்திலேயே மண்ணில் ஈரம் இருக்கும் போது மடக்கி உழுதுதல் வேண்டும்.
இவ்வாறு செய்வதால் அடுத்து சாகுபடி செய்யக்கூடிய பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைப்பதோடு, உரச் செலவும் குறையும். எனவே, விவசாயிகள் மண்ணுக்கு பல்வேறு நன்மைகளைத் தரக்கூடிய பசுந்தாள் உரச்செடிகளைப் பயிரிட்டு மண் வளத்தை மேம்படுத்தி பயிா் சாகுபடிகளில் அதிக மகசூல் பெறலாம் என்றாா் அவா்.
