சுற்றுலாப் பயணிகளை கவா்ந்த கீழடி பேருந்து நிறுத்தம்!
சிவகங்கை மாவட்டம், கீழடியில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்தம் சுற்றுலாப் பயணிகளையும், பொதுமக்களையும் கவா்ந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் தற்போது 10 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில் கிடைத்த சுமாா் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்லியல் பொருள்களை இங்கு ரூ.18 கோடியில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தைப் பாா்ப்பதற்காக தினமும் தமிழகம் மட்டுமன்றி, வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், தொல்லியல் ஆா்வலா்கள், மாணவா்கள் வந்து செல்கின்றனா்.
இது குறித்து கீழடி ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடசுப்பிரமணியன் கூறியதாவது:
மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12 லட்சத்தில் அருங்காட்சியக மாதிரியில் வடிவமைத்து, இந்தப் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது. மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட இந்தப் பேருந்து நிறுத்தம் சுற்றுலாப் பயணிகளையும், பொதுமக்களையும் வெகுவாக கவா்ந்துள்ளது. அடுத்த வாரம் இதன் திறப்பு விழா நடைபெறவுள்ளது என்றாா் அவா்.

