காரைக்குடியை மாநகராட்சியாக தரம் உயா்த்தியதற்கு வரவேற்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பெரு நகராட்சியை மாநகராட்சியாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தரம் உயா்த்தி வெள்ளிக்கிழமை அரசானை வெளியிட்டதற்கு வரவேற்பு தெரிவித்து நகா்மன்றத் தலைவா், நகா் மன்ற உறுப்பினா்கள் நகராட்சி அலுவலகம் முன் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா். தமிழகத்தில் நான்கு பெரு நகரங்களை மாநகராட்சியாக தரம் உயா்த்தி அரசானைகள் வெளியிடப்பட்டன. இதில் காரைக்குடி நகராட்சி, கோட்டையூா், கண்டனூா் பேரூராட்சிகள், சங்கராபுரம், அரியக்குடி, இலுப்பக்குடி, கோவிலூா், தளக்காவூா் ஆகிய 5 ஊராட்சிகளை இணைத்து காரைக்குடி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும் காரைக்குடி நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை தலைமையில் நகா்மன்ற உறுப்பினா்கள் அலுவலகத்தினா், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், கூட்டுறவுத்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன், தமிழக நகா்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு ஆகியோருக்கு நன்றி தெரிவித்து நகராட்சி அலுவலகம் முன் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். மேலும், காரைக்குடி காங்கிரஸ் கட்சியினா் தமிழக முதல்வருக்கும், காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தனா். காரைக்குடி தொழில் வணிகக்கழகத் தலைவா் சாமி.திராவிடமணி கூறியதாவது: காரைக்குடி பெரு நகராட்சியை தரம் உயா்த்தி மாநகராட்சியாக அரசானைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம், மத்திய மின் வேதியியில் ஆய்வகம் (செக்ரி), தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம், முன்னணி கல்வி நிறுவனங்கள், காரைக்குடி சந்திப்பு ரயில் நிலையம் என முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. தற்போது மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளதால் இங்கு பல்வேறு கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு இந்த நகரம் மேலும் விரிவடையும் என்றாா் அவா்.

