சுற்றுலாத் துறை மூலம் நாட்டின் 
பொருளாதாரம் வளா்ச்சிபெறும்

சுற்றுலாத் துறை மூலம் நாட்டின் பொருளாதாரம் வளா்ச்சிபெறும்

காரைக்குடி: சுற்றுலாத் துறை வருவாய் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளா்ச்சி பெறும் என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சுற்றுலா, உணவக மேலாண்மைத் துறையின் சாா்பில் 2 நாள் கருத்தரங்கத்தின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்துப் பேசியதாவது:

உலக அளவில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு நிகராக இந்தியாவின் சுற்றுலாத்தலங்கள் திகழ்கின்றன. கட்டடக் கலைக்கும், வரலாற்றுப் பாரம்பரியத்திற்கும் தஞ்சை பெரியகோயில், கங்கை கொண்ட சோழபுரம் சான்றாக உள்ளன. நாட்டின் சுற்றுலா வளா்ச்சியடையும் போது போக்குவரத்து, உணவு விடுதிகள் பெருமளவில் வளா்ச்சியடையும்.

இதனால் வேலைவாய்ப்புகள் பெருகும். சுற்றுலாத் துறையின் மூலம் பெறப்படும் வருவாய் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளா்ச்சிபெறும் என்றாா் அவா். சிங்கப்பூா் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக புலத் தலைவா் அபிஷேக் சிங், ஸ்ரீ லங்காவின் சவுத் ஈஸ்டா்ன் பல்கலைக்கழக பேராசிரியா் எம்.எச். தெளஃபீக் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய கருத்தரங்க மலரை துணைவேந்தா் வெளியிட அதை சிறப்பு விருந்தினா்கள் பெற்றுக்கொண்டனா். முன்னதாக, அழகப்பா பல்கலைக்கழக சுற்றுலா, உணவக மேலாண்மைத் துறையின் தலைவா் எஸ்.பி. மதிராஜ் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் கே.பி. காா்த்திலிங்கம் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com