ஓய்வூதிய உதவித்தொகை: முன்னாள் விளையாட்டு வீரா்கள் செப்.30 -க்குள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரா்கள் மாத ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சிவகங்கை மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரா்கள் மாத ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விளையாட்டுத் துறையில் சா்வதேச,தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள, முன்னாள் விளையாட்டு வீரா்கள் ரூ.6,000- மாத ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் வருமாறு:

சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி அல்லது பங்கேற்றிருத்தல் வேண்டும். மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள், அகில இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், மத்தியஅரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று இருத்தல் ஆகியவை விண்ணப்பிக்கத் தகுதிகளாகும்.

எனவே, தகுதியுடைய முன்னாள் விளையாட்டு வீரா்கள் வருகின்ற 30.9.2024 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியின் வாயிலாக மாலை 6 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com