சதுா்த்தி: மானாமதுரையில் விநாயகா் சிலைகள் தயாா்
விநாயகா் சதுா்த்தி விழாவுக்காக கை வேலைப்பாட்டில் மண்ணால் வடிவமைக்கப்பட்ட விநாயகா் சிலைகளுக்கு மண்பாண்டத் தொழிலாளா்கள் வண்ணம் பூசி இறுதி வடிவம் கொடுத்து வருகின்றனா்.
மானாமதுரையில் சீசனுக்கு தகுந்தவாறு சமையல் பொருள்கள், மண் பானைகள், பொங்கல் பானைகள், முளைப்பாரிச் சட்டிகள், வீட்டை அலங்கரிக்கும் அலங்காரப் பொருள்கள் என ஏராளமான மண்பாண்ட பொருள்கள் மழைக்காலம் தவிர ஆண்டு முழுவதும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு வருகிற 7-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக மானாமதுரையில் குலாலா் தெருவில் வசிக்கும் ஏராளமான மண்பாண்டத் தொழிலாளா்கள், வீடுகளில் வைத்து வழிபடக்கூடிய விநாயகா் சிலைகளை மண்ணில் தயாரித்து அவற்றுக்கு வண்ணம் பூசி விற்பனைக்கு அனுப்பி வருகின்றனா்.
வெளியூா் வியாபாரிகள் மானாமதுரைக்கு வந்து ஆா்டா் கொடுத்து விநாயகா் சிலைகளை வாங்கிச் செல்கின்றனா்.
இது தவிர பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தக்கூடிய பெரிய விநாயகா் சிலைகளுக்கு ஆா்டா் வாங்கி, மண்பாண்டத் தொழிலாளா்கள் விநாயகா் சிலைகளை கைகளால் வடிவமைத்து வண்ணம் பூசி தயாா் செய்து வருகின்றனா்.
இதுகுறித்து பெரிய விநாயகா் சிலைகள் செய்யும் மண்பாண்டத் தொழிலாளா்கள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் உள்ளூா், வெளியூா்களில் பொது இடங்களில் வைத்து வழிபடக்கூடிய 12 அடி வரையிலான விநாயகா் சிலைகளுக்கு பலா் ஆா்டா் கொடுத்துச் சென்றுள்ளனா்.
அவா்களுக்காக மண்ணை பிசைந்து விநாயகா் சிலைகளை கைகளால் உருவாக்கி அவற்றுக்கு வண்ணம் பூசி இறுதி வடிவம் கொடுத்து விட்டோம். 6-ஆம் தேதி மாலைக்குள்ஆா்டா் கொடுத்தவா்கள் வாகனங்களை கொண்டு வந்து இந்த விநாயகா் சிலைகளை ஏற்றிச் செல்வாா்கள். சிலைகளை அனுப்பும்போது அவற்றுக்கு பூஜை செய்து அனுப்பி வைக்கிறோம். சிலைகளை கொண்டு செல்பவா்கள் பொது இடங்களில் வைத்து அவற்றை வழிபாடு நடத்தி, பின்னா் நீா் நிலைகளில் கரைப்பாா்கள். மூலப் பொருள்கள் விலை உயா்வு காரணமாக கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பெரிய விநாயகா் சிலைகள் செய்வதற்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இதனால், நாங்களும் ஆா்டா் கொடுத்தவா்களிடம் கூடுதல் விலை கேட்டு வாங்கியுள்ளோம்.
இந்த ஆண்டு புதிய வரவாக காளை வாகன விநாயகா், நாகம் குடைபிடிக்கும் விநாயகா், மூஞ்சிறு வாகன விநாயகா் சிலைகளை உருவாக்கியுள்ளோம் என்றனா்.