உயிரிழந்த கோயில் யானை சுப்புலட்சுமியின் உடலுக்கு வெள்ளிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்திய தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்.
உயிரிழந்த கோயில் யானை சுப்புலட்சுமியின் உடலுக்கு வெள்ளிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்திய தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்.

தீக்காயமடைந்த குன்றக்குடி கோயில் யானை உயிரிழப்பு

யானையின் உடல் ஆதீன குரு மூா்த்தம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Published on

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் தீக் காயமடைந்த கோயில் யானை சுப்புலட்சுமி வெள்ளிக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தது. இதையடுத்து, யானையின் உடல் ஆதீன குரு மூா்த்தம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் யானை சுப்புலட்சுமி. 54 வயதான இந்த யானை குன்றக்குடி கோயில் மலையடிவாரத்தில் தகரக் கொட்டகை அமைத்து தங்க வைக்கப்பட்டிருந்தது. இந்தக் கொட்டகையில் வெப்பத்தைத் தணிக்க, தகரத்தின் கீழ்ப் பகுதியில் தென்னை ஓலைகளால் வேயப்பட்டிருந்தது. இந்தக் கொட்டகையில் யானையை சங்கிலியால் கட்டிப் பராமரித்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை நள்ளிரவில் இந்தக் கொட்டகையில் திடீரென தீப் பிடித்தது. இதையடுத்து, தீயில் எரிந்த ஓலைக் கொட்டகை விழுந்ததில் யானை காயமடைந்தது. உடனே அருகேயிருந்த பராமரிப்பாளா்கள் சங்கிலியைக் கழற்றியதால், காயமடைந்த யானை கொட்டகையிலிருந்து வெளியேறியது.

இந்த விபத்தில் யானையின் முகம், வயிறு, வால் பகுதிகளில் தீக் காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, கால்நடை மருத்துவக் குழுவினா் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனா். இந்த நிலையில், யானை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

இதையடுத்து, யானையின் உடல் குன்றக்குடி திருமடத்தில் வைக்கப்பட்டது. யானையின் உடலுக்கு

மதுரை ஆதீனம், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். மாங்குடி, செந்தில்நாதன், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.

இதைத்தொடா்ந்து, காலை 10 மணியளவில் திருமடத்திலிருந்து யானையின் உடல் குன்றக்குடி மலையைச் சுற்றி ஊா்லமாக எடுத்து வரப்பட்டது. பின்னா், குன்றக்குடி காவலா் குடியிருப்பு அருகே உள்ள ஆதீன குருமூா்த்தம் பகுதியில் கூறாய்வு செய்யப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் கூறியதாவது:

யானை சுப்புலட்சுமிக்கு கால்நடை மருத்துவா்கள் உயா்தர சிகிச்சையளித்தனா். இருப்பினும், யானை உயிரிழந்தது. குன்றக்குடியில் கடந்த 50 ஆண்டுகளாக கோயில் திருவிழாக்களிலும், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத் திருமடத்தின் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பக்தா்களுக்கு சுப்புலட்சுமி ஆசி வழங்கி வந்தது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com