~

மாற்றுத் திறனாளிகளுக்கு மதிப்பை பெற்றுத் தந்தது திமுக அரசு: அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்

Published on

மாற்றுத் திறனாளிகளுக்கு சமுதாயத்தில் மதிப்பை பெற்றுத் தந்தது திமுக அரசுதான் என கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.

சிவகங்கையில் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தலைமையில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.9 கோடி மதிப்பிலான 100 இணைப்புச் சக்கரம் பொருத்திய இரு சக்கர வாகனங்கள், 20 பேருக்கு மின்கலன் பொருத்தப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலி, அறிதிறன் பேசி, நவீன செயற்கை உறுப்பு, மடக்கு ஊன்றுகோல், மூன்று சக்கர சைக்கிள் ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கண், காது, உடல் உறுப்பு போன்ற குறைபாடுடையவா்களை ஒதுக்கப்படும் நிலை இருந்தது. ஆனால், அந்த நிலையை மாற்றி சமுதாயத்தில் மதிக்கப்படுபவா்களாக மாற்றியது முன்னாள் முதல்வா் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிதான். அவா்தான் மாற்றுத் திறனாளிக்களுக்கென தனித் துறையை உருவாக்கிய பெருமைக்குரியவா்.

இந்தத் துறை மூலம் உதவித்தொகை, சிறப்புப் பயிற்சி விடுதிகள் உருவாக்க நிதி ஒதுக்கப்பட்டது. முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய திட்டங்களை மனித நேயத்துடன் செயல்படுத்தி வருகிறாா். உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழகம் முழுவதும் 3,000 பேருக்கு உறுப்பினராகும் வாய்ப்பளித்தாா் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி பேசியதாவது:

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தின் நிகழாண்டுக்கான கருப்பொருள் ‘மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவது’ என்பதாகும்.

மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மூலம் மாற்றுத் திறனாளிகளின் 1,500 மனுக்களுக்கும், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் மூலம் 500 பேருக்கும், ‘தமிழ்நாடு உரிமைத் திட்டம்’ மூலம் 150 முன்களப் பணியாளா்களைக் கொண்டு விடுபட்ட மாற்றுத் திறனாளிகளை கணக்கெடுத்ததன்படி 15,000 பேருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ‘தாயுமானவா் திட்டம்’ மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி நியாய விலைக் கடை பொருள்கள் வழங்கப்படுகின்றன என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, சட்டப்பேரவை உறுப்பினா்கள் காரைக்குடி எஸ். மாங்குடி, தமிழரசி ரவிக்குமாா், நகா்மன்றத் தலைவா் சி.எம். துரைஆனந்த் ஆகியோா் பேசினா். இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் ராஜேஸ்வரி ராமதாஸ், தி. விஜயகுமாா், அயூப்கான், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கே. பாலகிருஷ்ணன் வரவேற்றாா். மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக முடநீக்கியல் தொழில்நுட்புனா் என். நமச்சிவாயம் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com