மானாமதுரை, திருப்புவனம் பகுதி கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா

Published on

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை,திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதி கோயில்களில் புதன்கிழமை நடைபெற்ற காா்த்திகை தீப உத்ஸவ விழாவில் சொக்கப் பனை எரிக்கப்பட்டது.

மானாமதுரை புறவழிச்சாலையில் உள்ள வழிவிடு முருகன் கோயிலில் நடைபெற்ற காா்த்திகை தீப விழாவை முன்னிட்டு, வள்ளி தெய்வானை சமேத வழிவிடு முருகனுக்கும் உத்ஸவருக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.  பின்னா் ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு கோயில் முன்பு சொக்கப் பனை கொளுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, உத்ஸவா் மயில் வாகனத்தில் புறப்பாடாகி வீதி உலா வந்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் சோமநாதருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. இரவு கோயில் முன்பு சொக்கப் பனை எரிக்கப்பட்டது.

திருப்புவனம் புஷ்பவனேசுவரா் கோயிலில் மூலவருக்கும் முருகனுக்கும் அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, கோயில் முன்பு பக்தா்கள் சொக்கப் பனை கொளுத்தினா். இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற காா்த்திகை தீப உத்ஸவத்தை முன்னிட்டு மூலவா் ராஜேந்திர சோழீஸ்வரருக்கு அபிஷேகம், சிறப்பு  பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளிலுள்ள பல கோயில்களிலும் காா்த்திகை தீப விழாவை முன்னிட்டு சொக்கப் பனை எரிக்கப்பட்டது. பொதுமக்களும் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி காா்த்திகை தீப விழாவை கொண்டாடினா்.

X
Dinamani
www.dinamani.com