சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் கைது
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 185 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை அரண்மனை வாசல் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ரா. மாரி தலைமை வகித்தாா். மாவட்ட மகளிா் அமைப்பாளா் பா.லதா, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநிலப் பொருளாளா் மா.விஜயபாஸ்கா், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ரா.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநிலத் துணைத் தலைவா் ஆ.தமிழரசன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், வருவாய் கிராம ஊழியா்கள், ஊா்ப்புற நூலகா்கள், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 82 பெண் ஊழியா்கள் உள்பட மொத்தம் 185 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

