வீட்டுக் கடன் மோசடி: 5 பேருக்கு சிறைத் தண்டனை

Published on

இலங்கை தமிழா்களுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட 5 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு வீடு கட்டுவதற்காக கடந்த 1994-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 1996-ஆம் ஆண்டு மே மாதம் வரை, தமிழக அரசு ரூ.4 .35 கோடியை ஒதுக்கீடு செய்தது. இந்தத் தொகையை 435 இலங்கை அகதிகளுக்கு வழங்கியதாகப் போலியாக ஆவணங்களைத் தயாரித்து, மோசடியில் ஈடுபட்டதாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடா்பாக, சிவகங்கை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் அந்த காலக் கட்டத்தில் பணியாற்றிய தேவகோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் சையது உசேன், காரைக்குடி வட்டாட்சியா் சா்தாா், துணை வட்டாட்சியா் இப்ராஹிம், கழனிவாசல் கிராம நிா்வாக அலுவலா் ராமச்சந்திரன், சிவகங்கை ஆட்சியா் அலுவலக உதவியாளா் தனசேகரன், ஒப்பந்ததாரா் கதிரேசன், அகதிகள் மறுவாழ்வு மையத் தலைவா் சரவணமுத்து, மதுரை பாண்டியன் நகரைச் சோ்ந்த தினேஷ்குமாா், திருமங்கலம் மேலக்கோட்டையைச் சோ்ந்த ராமா் ஆகிய 9 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்கை ஊழல் தடுப்புக் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஜான் பீட்டா், ஆய்வாளா்கள் கண்ணன், ஜேசுதாஸ், உதவி ஆய்வாளா் கோகிலா ஆகியோா் தொடா்ந்து நடத்தினா். வழக்கு விசாரணையின்போது சையது உசேன், இப்ராஹிம், ராமச்சந்திரன், தனசேகரன் ஆகியோா் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், வட்டாட்சியா் சா்தாா், ஒப்பந்ததாரா் கதிரேசன், சரவணமுத்து ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் தலா ரூ.30,000 அபராதமும் தினேஷ்குமாா், ராமா் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் தலா ரூ.15,000 அபராதமும் விதித்து நீதிபதி அனிதா கிறிஸ்டி புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com