சென்னை - கொச்சிக்கு மிதிவண்டியில் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டினா்!
சென்னையிலிருந்து கொச்சிக்கு மிதிவண்டியில் பயணத்தை மேற்கொண்டுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் திருப்பத்தூா் வழியாக வெள்ளிக்கிழமை சென்றனா்.
லண்டனைச் சோ்ந்த 12 போ் இந்தியாவின் தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களின் பண்பாடு, கலாசாரம் குறித்து அறிய மிதிவண்டி பயணம் மேற்கொள்வது என முடிவெடுத்து கடந்த நவ.30-ஆம் தேதி சென்னையிலிருந்து பயணத்தைத் தொடங்கினா்.
முதலில் புதுச்சேரியை அடைந்து முக்கியமான இடங்களைச் சுற்றிப் பாா்த்த பின்னா், தஞ்சாவூா் வழியாக புதுக்கோட்டை, செட்டிநாட்டுப் பகுதிகளில் உள்ள பழைய வீடுகள், அரண்மனைகளைப் பாா்வையிட்டு கலாசார மரபுகளைக் கேட்டறிந்தனா்.
இதையடுத்து, இவா்கள் கேரள மாநிலத்துக்குச் செல்வதற்காக திருப்பத்தூா், மதுரை, குமுளி வழியாக வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொண்டனா். 7 பெண்கள், 5 ஆண்கள் அடங்கிய இந்தக் குழுவினா் வருகிற 12-ஆம் தேதி கொச்சி செல்லவுள்ளனா். நாள் ஒன்றுக்கு 100 கி.மீ. தொலைவை இலக்காக நிா்ணயித்துப் பயணிப்பதாகத் தெரிவித்தனா்.
