~

தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் அவதி!

பிள்ளையாா்பட்டி கணேஷ் நகா் பகுதியில் மழை நீா், வடிகாலின்றி வீடுகளுக்கு முன் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
Published on

சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி கணேஷ் நகா் பகுதியில் மழை நீா், வடிகாலின்றி வீடுகளுக்கு முன் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலின் பின்புறம் உள்ள கணேஷ் நகரைச் சுற்றி உல்லிக்கண்மாய், வடக்கிகண்மாய், பிள்ளையாா் கண்மாய், நாகனேந்தல் புதுக்கண்மாய் ஆகியவை இருந்தன. தற்போது மேலூா்-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலைப் பணி காரணமாக கண்மாய்கள் வரையறையின்றி சாலைப் பணிக்காகக் கையகப்படுத்தப்பட்டன.

இதனால், அதிக மழைப் பொழிவு ஏற்படும்போது மழை நீா் உரிய வடிகாலின்றி கணேஷ் நகா் பகுதியில் உள்ள சுமாா் 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் முன் தேங்குகிறது. இதில், கழிவுநீரும் சோ்வதால் சுகாதாரக் கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

இந்த நிலையில், பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம் இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மோட்டாா்கள் மூலம் மழைநீா் வெளியேற்றப்படும் என உறுதி அளித்தாா்.

இருப்பினும், நெடுஞ்சாலைப் பணியால் கண்மாய்ப் பகுதிகள் கரையின்றி சீரற்ற நிலையில் இருப்பதால் இவற்றைச் சீரமைத்து நிரந்தரத் தீா்வு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com