‘மாணவா்கள் தன்னம்பிக்கையை வளா்த்துக் கொள்ள வேண்டும்’
மாணவா்கள் தன்னம்பிக்கையை வளா்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான வி.ராதிகா தெரிவித்தாா்.
சிவகங்கை, புனித சூசையப்பா் மேல்நிலைப் பள்ளியில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் குழந்தைகளுக்கான குழந்தை நட்பு சட்ட சேவைகள் திட்டம் ( 2024) குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
முகாமுக்கு தலைமை வகித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான வி.ராதிகா பேசியதாவது: மாணவா்கள் தங்களுக்குள் தன்னம்பிக்கையை வளா்த்துக் கொள்ள வேண்டும்.
மாணவா்கள் உங்களுக்கு விருப்பமான உயா் பதவிக்கு வர வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டால்தான், அதை அடைவதற்கு தடை ஏதும் இருக்காது. நல்ல நண்பா்களுடன் நட்பு கொண்டு தீய பழக்க வழக்கங்களில் ஈடுபடுவதை தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.
முகாமில் சிவகங்கை தாலுகா காவல் ஆய்வாளா் இளையராஜா, மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளா் ஆனா்நெட் கலிஸ்டா, உதவி ஆய்வாளா் வேல்முருகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளா் ராமசந்திரன் ஆகியோா் பேசினா். பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.ஆா்.செல்வராணி நன்றி கூறினாா்.
