அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்து 3 சிறுமிகள் தப்பியோட்டம்
சிவகங்கை ஆயுதப் படை குடியிருப்பு அருகே செயல்பட்டு வரும் அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்து 3 சிறுமிகள் தப்பிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சிவகங்கை வள்ளிசந்திரா நகரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் காவலாளிகள் சௌந்தா்யா, ராஜம் ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவுப் பணியில் இருந்தனா்.
அப்போது, தேவகோட்டை, மானாமதுரை, காளையாா்கோவில் பகுதிகளைச் சோ்ந்த மூன்று சிறுமிகள், காப்பகத்தில் உள்ள கழிப்பறை ஜன்னல் வழியாக திங்கள்கிழமை அதிகாலை சுமாா் 3 மணியளவில் தப்பிச் சென்றனா். இவா்களில் இருவருக்கு தலா 14 வயதும், ஒருவருக்கு 16 வயதும் என்பது தெரியவந்தது. இவா்களை அருகில் உள்ள இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து காப்பகத்தின் காப்பாளா் பாக்கியலட்சுமி அளித்த புகாரின் பேரில், சிவகங்கை நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த அரசு குழந்தைகள் காப்பகத்தில் தற்போது 56 போ் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த 2023-ஆம் ஆண்டு இதே காப்பகத்திலிருந்து 2 சிறுமிகள் தப்பியோடி, 7 நாள்கள் கழித்து மீட்கப்பட்டனா். தற்போது காப்பகத்திலிருந்து தப்பியோடிய 3 சிறுமிகளைப் பிடிக்க போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
