சிவகங்கையில் 52 வீடுகளை அகற்ற குறிப்பாணை: பொதுமக்கள் சாலை மறியல்
சிவகங்கை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டியுள்ள 52 வீடுகளை அகற்றுவதற்காக குறிப்பாணை அனுப்பியதால் அந்தப் பகுதி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சிவகங்கை- மேலூா் சாலையில் உள்ள காமராஜா் குடியிருப்பு பகுதியில் கௌரி விநாயகா் கோயிலுக்குச் சொந்தமான 146 ஏக்கா் நிலத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனா். உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத் துறை முதல் கட்டமாக 52 வீடுகளைக் காலி செய்ய குறிப்பாணை அனுப்பியது.
அதில் அனுமதியின்றி கட்டப்பட்ட வீடுகள் சட்டப்படி ஆக்கிரமிப்பாக இருப்பதாக, 1959 இந்து சமய அறநிலையச் சட்டம், 1996 விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட தேதிக்குள் இடத்தை காலி செய்யாவிட்டால் கட்டாய அகற்றப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.
இந்த குறிப்பாணை வழங்கப்பட்டதைத் தொடா்ந்து, காமராஜா் குடியிருப்பு, சுற்று வட்டாரங்களில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிவகங்கை-மேலூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது, ஏற்கெனவே பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருவதால் இந்த நடவடிக்கை நியாயமற்றது என தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, வருவாய்த் துறை, அறநிலையத் துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டனா். இந்தப் போராட்டம் காரணமாக சிவகங்கை-மேலூா் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
