விவசாயிகள் முன்னிலையில் பயிா் பாதிப்பு கணக்கீடு
பயிா் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் முன்னிலையில் நடத்த வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கா.பொற்கொடி தலைமையில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது:
வீரபாண்டியன்: காப்பீடு செய்யப்பட்ட பயிா்களின் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பை விவசாயிகளை அருகில் வைத்துக் கொண்டு நடத்த வேண்டும்.
கிருஷ்ணன்: மாவட்டத்தில் 12 ஒன்றியங்களைக் கொண்ட சிவகங்கை மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம். நீகழாண்டில் பருவம் தப்பி பெய்த மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
கன்னியப்பன்: தண்ணீரின்றி பயிா்கள் வாடிவிட்டன. கால்நடைகள், விலங்குகளாலும் பயிா்கள் சேதமடைந்து வருகின்றன.
வேளாண் இணை இயக்குநா்: சிவகங்கை மாவட்டம் முழுவதும் கண்மாய்களில் போதிய நீா் இருப்பு இல்லை. சிவகங்கை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க பரிந்துரை செய்யப்படும்.
வே. திருமூா்த்தி: மாராத்தூா் நெடுந்தாவு பொதுப்பணித் துறை கண்மாய் வரத்துக் கால்வாய் சீரமைக்கப்படுமா?
நீா்வளத் துறை பொறியாளா்: நெடுந்தாவு கிராம வரத்துக் கால்வாய்யை வரும் நிதியாண்டில் முன்னுரிமை அடிப்படையில் தூா்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
எஸ். கோபால்: மிளகனூா் அணைக்கட்டு உயரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
நீா்வளத் துறை பொறியாளா்: மிளகனூா் கண்மாயில் 55% நீா் இருப்பு உள்ளது. வைகை ஆறு, கால்வாய்களில் தண்ணீா் வரத்து நின்ற பின்னா் முழுமையாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாணிக்கவாசகம்: வைகை ஆற்றில் சம்பைப்புல் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
நீா்வளத் துறை பொறியாளா்: மானாமதுரை வட்டம், வைகை ஆற்றில் வளா்ந்துள்ள சம்பைப்புல், சீமைக்கருவேல மரங்களை படிப்படியாக பொது ஏலம் விட்டு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
எம். சந்திரன்: சுப்பன் கால்வாய்த் திட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரம் கிடைக்குமா?
நீா்வளத் துறை பொறியாளா்: சுப்பன் கால்வாயில் புதிதாக 2 தலை மதகுகள் அமைக்கவும், கால்வாயின் குறுக்கே உள்ள சிறிய பாலங்களை சீரமைக்கவும் ரூ.9.80 கோடியில் உங்கள்தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தில் பணிகளை மேற்கொள்ள அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சுப்பன் கால்வாயை மாற்றுவழியில் கொண்டு செல்ல தொழில் நுட்ப சாத்தியக் கூறுகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.
கருப்பையா: மேப்பல், கொல்லங்குடி, விட்டனேரி, முத்தூா் ஆகிய கண்மாய்கள் தூா்வாரப்படுமா?
நீா்வளத் துறை பொறியாளா்: கொல்லங்குடி கண்மாய் 2019 -இல் குடிமராமத்து திட்டத்தில் சீரமைக்கப்பட்டது. செங்குளிப்பட்டி கண்மாய் ரூ.1.10 கோடி, விட்டனேரி கண்மாய் ரூ.95 லட்சம், முத்தூா் கண்மாய் ரூ.51 லட்சம், மேப்பல் கண்மாய் ரூ.64 லட்சம் மதிப்பீடு தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சாத்தப்பன்: மறவமங்கலம் ஆற்றுப் பாலத்திலிருந்து அச்சங்குடி ஆற்றுப்பாலம் வகை உள்ள வரத்துக் கால்வாய்கள் தூா் வாரப்படுமா?
நீா்வளத் துறை பொறியாளா்: இந்த வரத்துக் கால்வாய் நாட்டாா்கால் ஆறு ஆகும். ஆற்றை சீரமைக்க ரூ. 8 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜி.அரவிந்த், இணைப் பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) ராஜேந்திர பிரசாத், இணை இயக்குநா் (வேளாண் துறை) சு.சுந்தரமகாலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தனலெட்சமி உள்பட பல்வேறு துறைகளைச் சாா்ந்த முதன்மை அலுவலா்கள், விவசாயிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.
