வீட்டை விட்டு வெளியேறிய முதியவரை 15 ஆண்டுகளுக்கு பிறகு கண்டறிந்த உறவினா்கள்
திருப்பூரைச் சோ்ந்த முதியவரை 15 ஆண்டுகளுக்கு பிறகு உறவினா்கள் வியாழக்கிழமை சிவகங்கை அரசு மருத்துவமனையில் நேரில் பாா்த்தனா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் கீரை வியாபாரம் செய்து வந்தவா் ராஜேந்திரன் (60). இவா் அண்மையில் திடீரென மயங்கிக் கீழே விழுந்தாா். அந்தப் பகுதியில் இருந்த மனிதநேய மக்கள் கட்சியினா், அவசர ஊா்தி மூலம் ராஜேந்திரனை மீட்டு, காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ராஜேந்திரனின் உறவினா்கள் யாரும் உள்ளனரா என மருத்துவா்கள் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது, ராஜேந்திரன் கடந்த 15 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வருவதாகவும், அவரது குடும்பத்தினா் திருப்பூா் மாவட்டத்தில் வசித்து வருவதாகவும் தெரியவந்தது. குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி வந்ததாகவும், இரண்டு மகன்கள் இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.
இதற்கிடையே, 15 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் தேடி வந்த அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிவகங்கை வந்த மகன்கள், தங்களது தந்தையைப் பாா்த்து மகிழ்ச்சி அடைந்தனா். தந்தையைகி காப்பாற்றி, தொடா்ந்து பராமரித்து வந்த மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகிகளுக்கு குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.

