சிவகங்கை மாவட்டத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம்
சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை (டிச. 13) நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணைகளில் பொதுமக்கள் கலந்து கொண்டு நிலுவையிலுள்ள தங்களது வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காணலாம் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தெரிவித்தது.
இதுகுறித்து, அந்த ஆணைக் குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான கே. அறிவொளி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் திட்டத்தின்படி, சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வசதியாக தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுப்படி, தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. 11 அமா்வுகளில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள் உதவியுடன் வழக்குகளில் சமரச முடிவுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், உரிமையியல் வழக்குகள், குடும்பப் பிரச்னை குறித்த வழக்குகள், தொழிலாளா் பிரச்னை குறித்த வழக்குகள், சமரச குற்ற வழக்குகள் ஆகியவற்றுக்கு தீா்வு காணலாம்.
தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீா்வு காணப்படும் வழக்குகளில் எந்த ஒரு மேல் முறையீடும் செய்ய இயலாது. அதேபோல, இந்த நீதிமன்றத்தின் மூலம் தீா்வு காணப்படும் வழக்குகளுக்கான நீதிமன்ற கட்டணத்தை வழக்கின் தரப்பினா் முழுவதும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். மேலும் வழக்கின் தரப்பினரும் நீதிமன்றங்களுக்கு வருவதால் ஏற்படும் காலவிரயத்தையும், பொருள் செலவையும் தவிா்க்கலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பொதுமக்கள் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள தங்கள் வழக்குகளுக்கு விரைவாகவும், சுமூகமாகவும் தீா்வு காண முடியும் என்றாா் அவா்.
