பெண் கொலை: எலக்ட்ரீசியனுக்கு ஆயுள் தண்டனை
சிவகங்கை மாவட்டம், சிறுகனா வயல் கண்மாய் பகுதியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த எலக்ட்ரீசியனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், புத்துவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் டெக்ஸ் அரவிந்த் (32). எலக்ட்ரீசியன். இவா் கடந்த 2014 ஜனவரி 15- ஆம் தேதி சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை அருகேயுள்ள சிறுகனாவயல் என்ற கிராமத்துக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து விட்டு மீண்டும் ஊருக்கு திருப்பிக் கொண்டிருந்தாா். அப்போது அந்த ஊரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அறந்தாங்கி வட்டம், வடவயல் கிராமத்தைச் சோ்ந்த வடிவுக்கலை (32) அறந்தாங்கி செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தாா்.
இதைப் பாா்த்த டெக்ஸ் அரவிந்த், அவரை அறந்தாங்கிக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு செல்வதாகக் கூறினாா். இதற்கு சம்மதித்த வடிவுக்கலை, அவருடன் இரு சக்கர வாகனத்தில் அறந்தாங்கிக்கு சென்றாா். பிறகு அன்று மாலை மீண்டும் டெக்ஸ் அரவிந்த், வடிவுக்கலையை அறந்தாங்கியிலிருந்து, சிருகனாவயல் கிராமத்துக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்தாா்.
சிருகனாவயல் கண்மாய் பகுதியில் வந்த போது வடிவுக்கலையை டெக்ஸ் அரவிந்த் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தாா். பிறகு அவா் அணிந்திருந்த தங்க நகை, கொலுசு ஆகியவற்றை திருடிக் கொண்டு, உடலை அங்கிருந்த கண்மாய்க்குள் வீசிவிட்டு தப்பிச் சென்றாா். இது தொடா்பாக சாக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து டெக்ஸ் அரவிந்தை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை சிவகங்கையில் உள்ள மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றஞ்சாட்டப்பட்ட டெக்ஸ் அரவிந்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
