கோயிலில் கல்வெட்டு அகற்றப்பட்ட விவகாரம்: இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தை பாஜகவினா் முற்றுகையிட முயற்சி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கோயில் கல்வெட்டு, கொடிமரத்தை அகற்றியதைக் கண்டித்து வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினரை போலீஸாா் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினா்.
இளையான்குடி பகுதியில் உயா்நீதிமன்ற உத்தரவுப்படி சாலையோரங்களில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பதாகைகள், கொடிக்கம்பங்கள் உள்ளிட்டவற்றை போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினா் அகற்றினா். சிறுபாலை கிராமத்தில் பட்டா இடத்தில் அமைந்துள்ள கிருஷ்ணா் கோயிலில் இருந்த கொடிமரத்தையும், கல்வெட்டையும் அதிகாரிகள் அகற்றினா்.
இதைக் கண்டித்து இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக பாஜகவினா் அறிவித்தனா். இதன்படி, இளையான்குடி பகுதியிலுள்ள இந்தக் கட்சியைச் சோ்ந்தவா்கள் இங்குள்ள வட்டாட்சியா் அலுவலகம் நோக்கி வந்தனா். இதனால் வட்டாட்சியா் அலுவலகம் முன் போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
அப்போது வட்டாட்சியா் அலுவலகத்துக்குள் செல்ல முயன்ற அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால் அவா்களுக்கும், போலீஸாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பிறகு வட்டாட்சியரை சந்தித்து மனு அளிப்பதற்காக ஒரு சிலரை மட்டும் போலீஸாா் உள்ளே அனுமதித்தனா். மற்றவா்கள் கலைந்து சென்றனா்.
