சிவகங்கையில் செவிலியா்கள் உண்ணாவிரதம்
பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கத்தினா் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் கிறிஸ்டி பொன்மணி தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினாா்.
அப்போது மருத்துவத் துறையில் நடைமுறையில் உள்ள ஒப்பந்த முறை, தினக்கூலி முறைகளை ரத்து செய்ய வேண்டும். தோ்தல் வாக்குறுதி எண் 356-இன் படி, எம்ஆா்பி தொகுப்பின் கீழ் பணியாற்றும் செவிலியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், 50 -க்கும் மேற்பட்ட செவிலியா்கள் பங்கேற்றனா்.
