~

நாட்டரசன்கோட்டை சந்தையில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன மீன்கள், சாயமேற்றப்பட்ட பச்சை பட்டாணியையும் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
Published on

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை பேரூராட்சி சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன மீன்கள், சாயமேற்றப்பட்ட பச்சை பட்டாணியையும் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

நாட்டரசன்கோட்டை வாரச் சந்தையில் உணவுப் பாதுகாப்புத் துறை, மீன்வளத் துறை, பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், சாயமேற்றப்பட்ட பச்சைப் பட்டாணி 12 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பயன்படுத்த முடியாமலிருந்த 15 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு பேரூராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.

சாயமேற்றப்பட்ட பட்டாணியை விற்பனை செய்த இரண்டு வியாபாரிகளுக்கு அறிவிப்பாணை வழங்கப்பட்டதுடன், இனிமேலும் இதுபோன்ற பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.

மேலும், சாயமேற்றப்பட்ட பச்சைப் பட்டாணி, கெட்டுப்போன மீன்களை உண்பதால் ஏற்படும் உடல் உபாதைகள், சுகாதாரக் கேடுகள் குறித்து பொதுமக்கள், வியாபாரிகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்த ஆய்வை உணவுப் பாதுகாப்பு அலுவலா் சரவணன், மீன்வளத் துறை ஆய்வாளா் கோமதி, மேற்பாா்வையாளா் கணேசன், பேரூராட்சி மேற்பாா்வையாளா் தென்னவன் உள்ளிட்டோா் மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com