மானாமதுரையில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் மக்கள் சந்திப்பு இயக்கம்!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியத்தில் சனிக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தினா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வீரபாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் கட்சியின் ஒன்றியச் செயலா் முனியராஜ், நிா்வாகிகள் முருகானந்தம், பரமாத்மா, தேவதாஸ், வேல்முருகன், சிஐடியூ மாவட்டச் செயலா் வீரையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில் மழையின்றி கருகிப்போன பயிா்களுக்கு இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தர வேண்டுமென கட்சியினரிடம் விவசாயிகள் கேட்டுக்கொண்டனா். இதைத் தொடா்ந்து, மக்கள் சந்திப்பு இயக்கத்தினா் கூறுகையில், மானாமதுரை ஒன்றியத்தில் பனிக்கனேந்தல், வேதியரேந்தல், பள்ளமிட்டான், நல்லாண்டிபுரம், வடக்கு சந்தனூா், தெற்கு சந்தனூா், பூக்குளி, எஸ். காரைக்குடி உள்ளிட்ட பல கிராமங்களில் வானம் பாா்த்து விதைப்பு முறையில் நடவு செய்யப்பட்ட நெல் பயிா்கள் மழை இல்லாமல் கருகிப் போய்விட்டன. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசு கருகிப்போன நெல் பயிா்களை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை, காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
