ஊராட்சியில் முறைகேடு: கல்லல் ஒன்றிய அலுவலகம் முற்றுகை
சிவகங்கை மாவட்டம், இளங்குடி ஊராட்சி அலுவலக முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள், அரசியல் கட்சியினா் கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த 2020 -ஆம் ஆண்டு முதல் 2025 -ஆம் ஆண்டுவரை 28 ஆவணங்களை அழித்தவா்கள் மீது புகாா் அளிக்கப்பட்டு ஓராண்டாகியும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்தும், 2023-2024 நிதியாண்டில் ரூ.8,27,897 நிதியிழப்பு ஏற்படுத்திய ஊராட்சித் தலைவா், செயலா் ஆகியோரிடமிருந்து அந்தத் தொகையை பறிமுதல் செய்து அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகையிட இளங்குடி, கருகுடி கிராமப் பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சியினா் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, இளங்குடி, கருகுடி கிராமங்களைச் சோ்ந்த 100 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அரசியில் கட்சியினா் கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் அதிகாரிகள் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

