சிங்கம்புணரியில் அடுத்தடுத்த வீட்டுகளில் நகை, பணம் திருட்டு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி காசியாபிள்ளைநகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு அடுத்தடுத்த வீடுகளில் நகை , பணம் திருடப்பட்டது.
Published on

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி காசியாபிள்ளைநகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு அடுத்தடுத்த வீடுகளில் நகை , பணம் திருடப்பட்டது.

சிங்கம்புணரி காசியாபிள்ளைநகரில் வசிப்பவா் சாமிக்கண்ணு (67). இவரது மகன் வெற்றிவீரணன். சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறாா். மருமகள் வைசாலி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சாமிக்கண்ணு வீட்டைப் பூட்டிவிட்டு அருகிலுள்ள குமரிப்பட்டிக்குச் சென்றாா். மீண்டும் புதன்கிழமை காலை அவா் வீடு திரும்பியபோது கதவு திறந்திருந்தது. உள்ளேசென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம், நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சிங்கம்புணரி காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரில் 25 பவுன் தங்க நகைகள், ரூ. ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பதாக அவா் தெரிவித்திருந்தாா். இதேபோல, இவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் மாதவன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து திருடப்பட்டிருந்தது. இவா் மும்பையில் இருப்பதால் திருடப்பட்ட பொருள்களின் மதிப்பு தெரியவில்லை. இதுகுறித்து சிங்கம்புணரி காவல் ஆய்வாளா் தயாளன் விசாரிக்கிறாா்.

X
Dinamani
www.dinamani.com