காளாப்பூரில் முதல்வரின் உழவா் நல சேவை மையம் திறப்பு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள காளாப்பூரில் முதல்வரின் உழவா் நல சேவை மைய திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு வேளாண்மை தோட்டக் கலை, வேளாண் பொறியியல் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்குடன் இந்தச் சேவை மையம் அறிவிக்கப்பட்டு சுமாா் 1,000 மையங்கள் திறப்பதென முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, பல்வேறு இடங்களில் இந்த மையங்கள் திறக்கப்பட்டன. வேளாண் பட்டதாரிகளுக்கு ரூ. 10 லட்சத்துக்கு ரூ. 3 லட்சம் வரை அரசு மானியம் வழங்கபட்டு இந்தச் சேவை மையம் திறக்கப்படுகிறது.
இதன் நோக்கம் விவசாயிகளுக்குத் தேவையான தரமான இடுபொருள்களான உரம், விதை, பூச்சிக்கொல்லி மருந்து, வேளாண் இயந்திரங்கள் (வாடகைக்கு) தொழில்நுட்ப ஆலோசனை என அனைத்தும் ஒரே இடத்தில் வழங்கப்படும். இதன்படி, சனிக்கிழமை காளாப்பூரில் வேளாண்மை துணை இயக்குநா் மு. சுமதி, இந்த மையத்தை திறந்துவைத்தாா். வேளாண் அலுவலா் புவனேஸ்வரி மையத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தாா். இதற்கான ஏற்பாடுகளை வேளாண் வணிக உதவி வேளாண்மை அலுவலா்கள் ரத்தினசாமி, விஜயகுமாா் ஆகியோா் செய்தனா்.

