காரைக்குடியை தனி மாவட்டமாக அறிவிக்க தொழில் வணிகக் கழகம் வலியுறுத்தல்

காரைக்குடியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தொழில் வணிகக் கழக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்
Updated on

காரைக்குடியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை நடைபெற்ற தொழில் வணிகக் கழக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகரத் தொழில் வணிகக் கழகத்தின் 18-ஆவது செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் சாமி. திராவிடமணி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. தொழில் வணிகக் கட்டட எம்.ஏ. சிதம்பரம் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, பொருளாளா் கே.என். சரவணன் முன்னிலை வகித்தாா். இதில் புரவலா் எஸ்.எல்.என்.எஸ். பெரியணன், துணைத் தலைவா்கள் காசி விஸ்வநாதன், சித்திரவேலு, இணைச் செயலா்கள் கந்தசாமி, சையது உள்ளிட்ட செயற்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்தில் தலைவா் சாமி. திராவிட மணி தீா்மானம் குறித்து விளக்கிப் பேசினாா்.

தீா்மானங்கள்: காரைக்குடிப் பகுதியில் வாழும் அனைத்து மக்களுக்கும் மத்திய, மாநில அரசின் நலத் திட்டங்களும், பயனாளிகளுக்குரிய சலுகைகள் கிடைக்கவும், மாவட்ட நிா்வாகத்தின் அதிகாரப் பகிா்வுகளை பரவலாக்கி விரைவாகச் சென்றடைய வேண்டும். எனவே, தமிழகத்தில் பல புதிய மாவட்டங்களை மாநில அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதன்படி, கடந்த 1984-ஆம் ஆண்டிலிருந்து காரைக்குடியைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கல் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனா்.

மேலும், தற்போது சிவகங்கை மாவட்டத்தில் 9 வட்டங்கள், 13 ஒன்றியங்கள், 3 நகராட்சிகள், ஒரு மாநகராட்சி, பல்வேறு பேரூராட்சிகள், ஊராட்சிகள் இருப்பதை சமமாகப் பிரித்து காரைக்குடியைத் தலைமையிடமாக்கி ஒரு புதிய மாவட்டமாக மாநில அரசு அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, செயலா் எஸ். கண்ணப்பன் வரவேற்றாா். இணைச் செயலா் வீர. ராமநாதன் (எ) மோகன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com