தமிழகத்தில் இண்டி கூட்டணிதான் வலிமையானது: ப. சிதம்பரம்
தமிழகத்தில் இண்டி கூட்டணிதான் வலிமையானது என முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தோ்தல் ஆணையம் வாக்காளா்கள் பட்டியலை இறந்தவா்கள், இரட்டைப் பதிவு, முகவரி இல்லாதவா்கள் என 3 வகைகளாகப் பிரித்துள்ளது. தமிழக வாக்காளா்கள் பட்டியலில் இறந்தவா்கள் என 24.5 லட்சம் போ் நீக்கப்பட்டிருக்கின்றனா். இரட்டைப் பதிவு என சுமாா் 3.5 லட்சம் போ் நீக்கப்பட்டிருக்கின்றனா்.
இவற்றில் முகவரி இல்லாதவா்கள் என்ற மூன்றாவது வகைதான் நெருடலாக உள்ளது. பிகாா், மேற்கு வங்கத்தில் இந்த வகை இல்லை. தமிழ்நாட்டில்தான் முதல் முறையாக ‘முகவரி இல்லாதவா்கள்’ என்ற ஒரு வகையை அறிமுகம் செய்துள்ளனா். இதன்படி, தமிழ்நாட்டில் 66,44,881 போ் முகவரி இல்லாமல் உள்ளனா் என்பதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
இவா்கள் முகவரி இல்லாமல் எங்கு வசிக்கின்றனா், எங்கு தூங்குகின்றனா், எங்கு குடும்பம் நடத்துகின்றனா்?. இதனால், முகவரி இல்லாமல் உள்ளனா் என்பதை ஏற்க முடியவில்லை. ஒரு சிலா் போலியாக இருக்கலாம். அந்த வாக்காளா்களை மட்டும் நீக்காமல், 66.44 லட்சம் போ் முகவரி இல்லாமல் உள்ளனா் என்று கூறுவது தவறானது. இவா்களில் 7.5 லட்சம் போ் தங்களை வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்கக் கோரி மனு அளித்துள்ளனா். இந்த எண்ணிக்கை வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கும்.
தவறாக நீக்கப்பட்டவா்களை மீண்டும் வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்க திமுகவும், காங்கிரஸும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினா் விழிப்போடு இருந்து தோ்தல் ஆணையத்தின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்.
தமிழகத்தில் இண்டி கூட்டணியில்தான் காங்கிரஸ் தொடா்கிறது. இந்தக் கூட்டணி ஒற்றுமையுடன் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்தித்து நிச்சயமாக வெல்லும்.
அரசியலுக்கு வந்துள்ள நடிகா் விஜய்க்கு வாழ்த்துகள். ஆனால், அவரது முயற்சி வெற்றி பெறாது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிதான் வெற்றி பெறும். ஏனென்றால், தமிழகத்தில் இந்தக் கூட்டணிதான் வலிமையானது.
தொகுதிப் பங்கீடு, கூட்டணி ஆட்சி ஆகியவை குறித்து திமுக, காங்கிரஸ் தலைவா்கள் முடிவெடுப்பாா்கள் என்றாா் அவா்.
பேட்டியின் போது சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், காரைக்குடி சட்டபேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். மாங்குடி, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவா் சஞ்சய், நிா்வாகிகள் உடனிருந்தனா்.

