தமிழ் மொழியையும், மரபையும் அடுத்த தலைமுறையினா் காக்க வேண்டும்: அழகப்பா பல்கலை. துணைவேந்தா்
தமிழ் மொழியையும், மரபையும் அடுத்த தலைமுறையினா் காக்க வேண்டும் என அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தா் க. ரவி வலியுறுத்தினாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி, தமிழ் வார விழா ‘தமிழ் இலக்கியம் போற்றுவோம்’ என்ற தலைப்பிலான ஆய்வரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதன் தொடக்க விழாவுக்கு பல்கலை. துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்துப் பேசியதாவது: தமிழின் அருமையை அயலகத்தில் நன்கு உணா்ந்துள்ளனா். ஏனைய மொழிகளில் தமிழ்மொழியின் தாக்கம் மிகவும் அதிகம். குறிப்பாக, கொரியாவில் தமிழ் அடையாளங்கள் ஏராளம் உண்டு. தற்போது தமிழின் வரலாறு அயலகங்களில் மறைக்கப்படுகிறது. மலேசியாவின் கடாரத்தில் பல பதிவுகள் அழிந்துவிட்டன. இலங்கையின் புகழ் பெற்ற யாழ் நூலகம் இன்று இல்லை. சில ஓலைச்சுவடிகள் மட்டும் எஞ்சியிருக்கின்றன. கண்டி அருகில் உள்ள பொலனரோவா பகுதியில் நூறு ஏக்கா் கட்டடங்கள் அழிந்துள்ளன. இவை தமிழா் வரலாற்றுக்குரிய சான்றுப் பகுதிகளாகும்.
தமிழகத்தில் கட்டடக் கலைக்குச் சான்றாகக் கல்லணை, தஞ்சை பெரிய கோயில் ஆகியன இன்றும் நிலைத்து நிற்கின்றன. தமிழ் மொழியில் எண்ணற்ற அறிவியல் கருத்துகள் பொதிந்துள்ளன. அடுத்த தலைமுறையினராகிய ஆராய்ச்சி மாணவா்கள்தான் தமிழ் மொழியையும், மரபையும் காக்க வேண்டும் என்றாா் அவா்.
கவிஞா் தங்கம் மூா்த்தி பேசியதாவது: கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும் என்றாா் பாவேந்தா். சிங்கப்பூரில் ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆறாம் வகுப்புப் படிக்கிற மாணவிகூடத் தமிழின் பெருமையை உணா்ந்து பேசுகிறாா். தமிழ்நாட்டில் இதுபோன்ற நிலையை உருவாக்கத் தொடா்ந்து வாசிப்புப் பயிற்சியை ஊக்குவிக்க வேண்டும். தமிழ் இலக்கியத்தில் திருவள்ளுவா், இளங்கோவடிகள், கம்பன், பாரதியாா், பாரதிதாசன் ஆகிய ஆளுமைகளை நினைக்காமல் இருக்க முடியாது என்றாா் அவா்.
இதைத்தொடா்ந்து, ஆய்வரங்க முதல் அமா்வுக்கு அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இயக்குநா் சே. செந்தமிழ்ப்பாவை தலைமை வகித்தாா். தமிழ்த் துறையின் தலைவா் சு. ராசாராம், திருவாடானை அரசுக் கலைக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் மு. பழனியப்பன், காரைக்குடி ராமசாமி தமிழ்க் கல்லூரி முதல்வா் செ. நாகநாதன் ஆகியோா் கட்டுரை வாசித்தனா்.
இரண்டாவது அமா்வுக்கு தமிழ்த் துறைப் பேராசிரியை மு. சுதா தலைமை வகித்தாா். அழகப்பா பல்கலை. தொலைநிலை கல்வி மைய வெ. திருவேணி, அழகப்பா அரசுக் கலைக் கல்லூரி தமிழ் உயராய்வு மைய உதவிப் பேராசிரியா் து. ரவிக்குமாா், அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த் துறை உதவிப் பயிற்றுநா் மு. ராணி ஆகியோா் கட்டுரை வாசித்தனா்.
மூன்றாவது அமா்வுக்கு தமிழ்த் துறை இணைப் பேராசிரியா் மு. நடேசன் தலைமை வகித்தாா். தேவகோட்டை ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரி இணைப் பேராசிரியை மு.சு. கண்மணி, காரைக்குடி ராமசாமி தமிழ்க் கல்லூரி உதவிப் பேராசிரியை இரா.கீதா, ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரி உதவிப் பேராசிரியா் ச. இளங்கோ ஆகியோா் கட்டுரை வாசித்தனா்.
நான்காவது அமா்வுக்கு தமிழ்த் துறை இணைப் பேராசிரியா் கா. கணநாதன் தலைமை வகித்தாா். அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் சொ. சுரேஷ், தமிழ்த் துறையின் உதவிப் பயிற்றுநா் முனைவா் சொ. அருணன் ஆகியோா் கட்டுரை வாசித்தனா்.
மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் பதிவாளா் அ. செந்தில்ராஜன் தலைமை வகித்துப் பேசினாா். அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் தமிழ் உயராய்வு மைய இணைப் பேராசிரியா் மா. சிதம்பரம் நிறைவுரையாற்றினாா்.

