அமைச்சரவையில் பங்கு வகிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு காங்கிரஸுக்கும் உண்டு: காா்த்தி சிதம்பரம் எம்.பி.
அமைச்சரவையில் பங்கு வகிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு காங்கிரஸ் கட்சிக்கும் உண்டு என சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் பல மாநிலங்களில் நடைபெற்றது. இந்தப் பணியின் போது, கடந்த தோ்தல்களில் வாக்களித்தவா்களுக்கு எந்தவித அறிவிப்பும் கொடுக்காமல் அவா்களை பட்டியலிலிருந்து நீக்கக் கூடாது. இதேபோல, புதிய வாக்காளா்களைச் சோ்க்கும் போது நன்கு விசாரணை செய்துதான் சோ்க்க வேண்டும்.
வெளிமாநிலங்களிலிருந்து தற்காலிகமாக வந்திருப்பவா்களைக் கண்டிப்பாக வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்கக் கூடாது. வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை உச்சநீதிமன்றம் செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ள நிலையில், அதை நிறுத்திவைக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீா்மானத்தால் அதை நிறுத்தி வைக்க முடியாது.
மேலும், தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கு பிற மாநிலத்தவா்களின் வருகை அவசியம்தான். அவா்களுக்கும் நமக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது. ஆனால், குறுகிய மனப்பான்மையோடு பிகாரில் அடுத்த வாரம் நடைபெறும் தோ்தலைக் கருத்தில் கொண்டு பிரதமா் பேசியிருப்பது வருத்தமளிக்கிறது.
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணி கட்சியினரும் அமைச்சரவையில் பங்கு வகிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. அவ்வாறு வாய்ப்புக் கிடைத்தால், அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வோம் என்றாா் அவா்.
