திருப்புவனம் அரசு மருத்துவமனையில் உடல் கூறாய்வு கட்டடத்துக்கு அடிக்கல்

Published on

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரசு மருத்துவமனையில் ரூ. 63 லட்சத்தில் கட்டப்படவுள்ள உடல் கூறாய்வு கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருப்புவனம் அரசு மருத்துவமனையில் உடல் கூறாய்வுக் கட்டடம் கட்ட ரூ. 63 லட்சம் நிதி ஒதுக்கினாா். இதையடுத்து, கட்டடப் பணி தொடங்குவதற்காக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், சிறப்பு அழைப்பாளராக சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டினாா்.

இதில் திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த. சேங்கைமாறன் பேசுகையில், சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.

இந்த விழாவில் மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஏ.சி. சஞ்சய், நகரத் தலைவா் நடராஜன், வட்டாரத் தலைவா் செந்தில்குமாா், மருத்துவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா், காா்த்தி சிதம்பரம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல் துறை கடும் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கவும், சட்டம்-ஒழுங்கை காக்கவும் காவல் துறை கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை அனைத்து அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் கண்காணிக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com