பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம்: தரவு தளத்தில் நவ.15-க்குள் விவசாயிகள் பதிவு செய்யலாம்

Published on

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டப் பயன்களை தொடா்ந்து பெறுவதற்கு தரவு தளத்தில் பதிவு செய்யாத விவசாயிகள் வருகிற 15-ஆம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும் என வேளாண் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக சிவகங்கை வேளாண் துறை இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தின்கீழ் இணையதளம் மூலம் விவசாயிகளின் ஒருங்கிணைந்த தரவு உருவாக்கும் பணியை மத்திய, மாநில அரசு மேற்கொண்டு வருகின்றன. அரசு நலத் திட்டங்கள் அனைத்தும் முறையாக விவசாயிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில், தமிழக அரசு, வேளாண் அடுக்ககம் / கிரைன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மத்திய வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறையின்படி, மாநிலம் முழுவதும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மின்னணு முறையில், விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, மாநிலத்திலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும், ஆதாா் எண் போன்று விவசாயிகளுக்கென தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில், அரசின் அனைத்து திட்டப் பலன்களும் விவசாயிகளின் தரவு தளம் அடிப்படையிலேயே வழங்கப்படும்.

சிவகங்கை மாவட்டத்தில் இந்தக் கணக்கெடுப்புப் பணி வேளாண் துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண் விற்பனை துறை, வேளாண் பொறியியல் துறை, மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பொது சேவை மையங்கள் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிவகங்கையில் இன்றுவரை 96,016 விவசாயிகள் மட்டுமே இந்தத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனா். இன்னும் 65,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின்கீழ், பதிவு செய்து ஆண்டுதோறும் ரூ. 6,000 பெற்று வரும் 9,311 விவசாயிகள் இன்றுவரை இந்தத் திட்டத்தின்கீழ் பதிவு எண் பெறவில்லை.

இந்த நிலையில், வருகிற 15-ஆம் தேதிக்குள் அடையாள எண் பெறாத பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டப் பயனாளிகளுக்கு அடுத்த தவணைத் தொகை விடுவிக்கப்படமாட்டாது. எனவே, அனைத்து விவசாயிகளும் வருகிற 15-ஆம் தேதிக்குள் தரவு தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தகுதி, தேவையான ஆவணங்கள்: நேரடி பட்டா, கூட்டுப் பட்டா வைத்துள்ள அனைத்து விவசாயிகளும் பதிவு செய்ய தகுதி உடையவா்கள். பதிவை மேற்கொள்ள, விவசாயிகள் தங்களது ஆதாா் எண், 10 (1) நகல், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகியவற்றுடன் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலா் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பொது சேவை மையங்கள் மூலமாகவும் தரவுகள் பதிவேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னோா்கள் பெயரில் பட்டா வைத்துள்ள விவசாயிகள் தங்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்த பின்னரே இதில் பதிவுசெய்ய இயலும்.

மேலும், விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண், தோட்டக் கலை உதவி இயக்குநா்அலுவலகத்தை அணுகலாம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com