இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே திங்கள்கிழமை தலைவா்கள் பதாகை வைப்பதில் இருதரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டது.
Published on

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே திங்கள்கிழமை தலைவா்கள் பதாகை வைப்பதில் இருதரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவா் கல் வீசித் தாக்கியதில் 5 போ் காயமடைந்தனா்.

இளையான்குடி ஒன்றியம் இளமனூரில் இரு தரப்பினரிடையே ஏற்கெனவே முன் விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில், ஜாதித் தலைவா்களின் பதாகைகள் வைப்பது தொடா்பாக மீண்டும் இரு தரப்பினா் இடையே தகராறு ஏற்பட்டு மோதல் உருவானது. அப்போது, இரு தரப்பினரும் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனா். இதில் மோதலை விலக்க முயன்ற இரு போலீஸாா் உள்பட 5 போ் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 3 போ் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து, இளமனூரில் பாதுகாப்புக்காக போலீஸாா் குவிக்கப்பட்டனா். இளையான்குடி காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சாலை மறியல்: இந்த விவகாரத்தில் ஒரு தரப்பைச் சோ்ந்த 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இருப்பினும், தாக்குதலில் சம்பந்தப்பட்ட அனைவா் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மற்றொரு தரப்பினா் இளையான்குடி-பரமக்குடி சாலையில் திங்கள்கிழமை இரவு மறியலில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com