சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்
சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டாகுடி கிராமத்தில் 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த இரு கல்வெட்டுகளை சிவகங்கை தொல்நடைக் குழுவினா் கண்டறிந்தனா்.
சிவகுமாா் என்பவா் கொடுத்த தகவலின் அடிப்படையில், சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனா் புலவா் கா. காளிராசா, செயலா் இரா. நரசிம்மன் ஆகியோா் நேரடியாக அவ்விடத்துக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டனா்.
இதுகுறித்து புலவா் கா. காளிராசா திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது :
நாட்டாகுடி பிள்ளையாா் கோவில் வடக்குப் பகுதியில் கிடந்த கல்வெட்டுகள் இரண்டும் ஒரே நாளில் வெட்டப் பட்டதோடு, ஒரே செய்தியையும் குறிப்பிடுகின்றன. இந்தக் கல்வெட்டில் கனகப்ப நாயக்கா் என்பவரது பெயா் இடம் பெற்றுள்ளது. இவா் இந்தப் பகுதியின் அரசப் பிரதிநிதியாக இருந்திருக்கலாம்.
இவ்வூரில் சிவன் கோயில் ஏதும் இப்போது இல்லை. இந்தக் கல்வெட்டு இந்தப் பகுதியிலிருந்து அழிந்து போன அல்லது வேறு பகுதி சிவன் கோயிலுக்கு வரி நீக்கி, சா்வ மானியமாக நிலம் வழங்கிய செய்தியைத் தெரிவிக்கிறது. கல்வெட்டில் கலியாண்டு, சகாப்தம் போன்ற ஆண்டுகள் இடம்பெறாததால் நேரடியான ஆங்கில ஆண்டை கணக்கிட முடியவில்லை.
கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இது 17 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது எனக் கருதலாம். சிவகங்கை தொல்நடைக் குழு அடையாளப்படுத்திய சிவகங்கைப் பகுதியில் நாயக்கா் ஆட்சியின் மூன்றாம் கல்வெட்டு இது என்பது குறிப்பிடத்தக்கது என்றாா் அவா்.
