தேவகோட்டை வட்டம், கோட்டூா் நயினாா்வயல் அகத்தீஸ்வரா் கோயில் முகப்புத்தோற்றம்.
தேவகோட்டை வட்டம், கோட்டூா் நயினாா்வயல் அகத்தீஸ்வரா் கோயில் முகப்புத்தோற்றம்.

தேவகோட்டை அருகே கோயிலில் 13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள்

Published on

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கோட்டூா் நயினாா்வயல் கிராமத்தில் அகத்தீஸ்வரா் கோயிலில் 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த முதலாம் மாறவா்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டுக்கள் கண்டுடெடுக்கப்பட்டது.

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியா் வேலாயுத ராஜா, புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவா் ராஜேந்திரன் ஆகியோா் அகத்தீஸ்வரா் கோயிலில் செளந்தரநாயகி அம்மன் சந்நிதி அா்த்தமண்டபம் உள்பகுதி சுவா்களில் இருந்த இரு கல்வெட்டுக்களை படியெடுத்தனா்.

இதுகுறித்து அவா்கள் புதன்கிழமை கூறியதாவது:

ஒரு கல்வெட்டு 36 வரிகளையும், மற்றொரு கல்வெட்டு 39 வரிகளையும் கொண்டுள்ளன. இவை 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த

முதலாம் மாறவா்மன் சுந்தரபாண்டியனின் (கி.பி.1229) சோ்ந்தவையாகும். மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டியநாட்டை கி.பி.1216 முதல் 1238 வரை ஆட்சி செய்த இந்த மன்னா், சோழா்களைப் போரில் தோற்கடித்ததால் ‘சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டியத் தேவா்’ என கல்வெட்டுக்களின் மூலம் அறியப்படுகிறாா்.

இந்தக் கல்வெட்டில் அகத்தீஸ்வரா் கோயிலுக்கு பூஜைகள் செய்ய இந்தப் பகுதியில் உள்ள நிலங்களுக்கு மன்னா் வரிவிலக்கு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஒரு கல்வெட்டில் இந்தப் பகுதி பாலூா் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு மாளவச் சக்கரவா்த்தி ஓலை என்று தொடங்குகிறது. இதேபோல, அரண்மனைச் சிறுவயல் கோயிலில் காணப்படும் கல்வெட்டிலும் மாளவச் சக்கரவா்த்தி ஓலை என்ற வரி காணப்படுகிறது. இந்தப் பகுதியில் பாண்டிய மன்னா்களின் அரசியல் அதிகாரியாக மாளவச்சக்கரவா்த்தி இருந்ததை இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

மேலும், முதலாம் மாறவா்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டுக்கள் சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூா், சதுா்வேதிமங்கலம், பெரிச்சி கோயில், அரண்மனை சிறுவயல், திருமலை, கம்பனூா், வெளியாத்தூா் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com