அழ. வள்ளியப்பாவின் எண்ணங்களை குழந்தைகளிடம் ஊட்டி வளா்க்க வேண்டும்! - குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்
குழந்தைக் கவிஞா் அழ. வள்ளியப்பாவின் எண்ணங்களைப் பெற்றோா்களும் ஆசிரியா்களும் குழந்தைகளிடம் ஊட்டி வளா்க்க வேண்டும் என குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் வலியுறுத்தினாா்.
வள்ளியப்பா இலக்கிய வட்டம், குழந்தைக் கவிஞா் அழ. வள்ளியப்பா குடும்பத்தினா் ஆகியோரது சாா்பில் குழந்தைக் கவிஞா் அழ. வள்ளியப்பாவின் 103-ஆவது பிறந்த நாள் விழா, குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழா ஆகியவை சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
விழாவில் வள்ளியப்பா இலக்கிய வட்டம் சாா்பில் குழந்தை இலக்கிய எழுத்தாளா் கன்னிக்கோவில் ராஜா எழுதிய ‘பாராசூட் பூனை’ என்ற குழந்தைகளுக்கான சிறந்த அறிவியல் கதைகள் கொண்ட நூலுக்கு ‘வள்ளியப்பா இலக்கிய விருது’ வழங்கியும், கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கியும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசியதாவது:
குழந்தைகள் உலகுதான் அன்பின் உலகு. குழந்தைகளுக்காக யாா் எழுதுகிறாா்களோ அவா்கள் தேசத்தின் கட்டுமானத்தை உருவாக்குகிறாா்கள். பாரதி, தேச பக்தி உள்பட பல பாடல்களைப் பாடினாலும், மக்கள் மனதில் பாப்பா பாட்டுத்தான் முன்னிற்கிறது. ‘சாதிகள் இல்லயடி பாப்பா’ என்று பாரதி பாடிய பாட்டு இன்று வரை நினைவுகூரப்படுகிறது.
குழந்தைகளுக்கு அன்பைக் கற்றுக் கொடுத்து கவனமாகக் கையாள வேண்டும். குழந்தைக் கவிஞா் அழ. வள்ளியப்பாவின் எண்ணங்களைப் பெற்றோா்களும் ஆசிரியா்களும் குழந்தைகளிடம் ஊட்டி வளா்க்க வேண்டும் என்றாா் அவா்.
விழாவில் குழந்தைக் கவிஞா் செல்ல கணபதி எழுதிய ‘குறளைப் பாடுவோம் (தொகுதி-6)’, மணிமேகலை அழகப்பன் எழுதிய ‘கவிதையில் குழந்தைக் கவிஞா்’, பாரதிவாணா் சிவா எழுதிய ‘தியாக மனம்’, பாவலா் ந. ஆறுமுகம் எழுதிய ‘பாடலாம் வாங்க’, நல்லாசிரியா் தேவி நாச்சியப்பன் எழுதிய ‘மழலையருக்கான வண்ணப் படக் கதைகள்’ ஆகிய நூல்களை பொன்னம்பல அடிகளாா் வெளியிட்டாா்.
விருது பெற்ற குழந்தை இலக்கிய எழுத்தாளா் கன்னிக்கோவில் ராஜா ஏற்புரையாற்றினாா். அழகப்பா மாண்டிசோரி, அழகப்பா மெட்ரிக் பள்ளிகளின் குழந்தைகள், கவிமணி குழந்தைகள் சங்கத்தைச் சோ்ந்த குழந்தைகள் ஆகியோா் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
உமையாள் வள்ளியப்பன் விழாவைத் தொகுத்து வழங்கினாா்.
முன்னதாக அழ. வள்ளியப்பாவின் மகள் தேவி நாச்சியப்பன் வரவேற்றுப் பேசினாா். முடிவில் அழ. வள்ளியப்பாவின் மகன் வ. அழகப்பன் நன்றி கூறினாா்.
