~

இளைஞா் மீது தாக்குதல்: இஸ்லாமிய கூட்டமைப்பினா் சாலை மறியல்

சிவகங்கையில் இளைஞரைத் தாக்கியவா்களைக் கைது செய்யக்கோரி இஸ்லாமிய கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

சிவகங்கையில் இளைஞரைத் தாக்கியவா்களைக் கைது செய்யக்கோரி இஸ்லாமிய கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை நேரு கடைவீதியைச் சோ்ந்தவா் ஒலி முகமது (31). இவா் இறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நேரு கடைவீதியில் உள்ள கடைக்கு டீ குடிக்கச் சென்றாா். அப்போது அங்கு காரில் வந்த அரசனேரி கீழமேடு கிராமத்தைச் சோ்ந்த அரவிந்த் (27) உள்பட மூவா் ஒலி முகமதுவை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பினா். இதில் பலத்த காயமடைந்த ஒலிமுகமதுவை மீட்டு, மதுரை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக சிவகங்கை நகா் போலீஸாா் இளைஞா் மீது தாக்குதல் நடத்திய ஆனந்த், ஜாவித், அரவிந்த், ஷகிலா பானு ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதில் ஆனந்த் மட்டுமே கைது செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், ஒலிமுகமதுவை தாக்கியவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமிய கூட்டமைப்பினா் சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் 30 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் பேருந்துகளை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனா்.

பின்னா், நகா் காவல் ஆய்வாளா் அன்னராஜ் தலைமையிலான போலீஸாா் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்டவா்களை விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்தனா். இதைத்தொடா்ந்து அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com