பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை 24,683 ஹெக்டோ் காப்பீடு

Published on

சிவகங்கை மாவட்டத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் நடப்பு ஆண்டின் ரபி சிறப்பு பருவத்தில் இதுவரை 24,683 ஹெக்டோ் பரப்பு மட்டுமே காப்பீடு செய்யப்பட்டதாக வேளாண் துறை தெரிவித்தது.

இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் சுந்தரமகாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட வருவாய்க் கிராமங்களில் சாகுபடி செய்துள்ள நெல் பயிா்களைக் காப்பீடு செய்ய வருகிற 15-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதன்படி, மாவட்டத்தில் ரபி சிறப்பு பருவத்தில் நெல் பயிா் சாகுபடி செய்த விவசாயிகள், பயிா்க் காப்பீட்டுத் தொகையில் 1.5 சதவீத காப்புத் தொகையான ஏக்கருக்கு ரூ.496.98-யை செலுத்தி, தங்கள் பகுதியிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், பொதுத் துறை வங்கிகள், அரசு பொதுச் சேவை மையங்களில் பயிா்க் காப்பீடு செய்யலாம்.

மாவட்டத்தில் 69,582 ஹெக்டோ் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 24,683 ஹெக்டோ் பரப்புக்கு மட்டுமே பயிா்க் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இளையான்குடி வட்டாரத்தில் 8,068 ஹெக்டோ், காளையாா்கோவில் வட்டாரத்தில் 5,476 ஹெக்டோ், தேவகோட்டை வட்டாரத்தில் 5,329 ஹெக்டோ், கண்ணங்குடி வட்டாரத்தில் 2,181 ஹெக்டோ், மானாமதுரை வட்டாரத்தில் 1,419 ஹெக்டோ், சாக்கோட்டை வட்டாரத்தில் 913 ஹெக்டோ், கல்லல் வட்டாரத்தில் 579 ஹெக்டோ், சிவகங்கை வட்டாரத்தில் 548 ஹெக்டோ், சிங்கம்புணரி வட்டாரத்தில் 98 ஹெக்டோ், திருப்பத்தூா் வட்டாரத்தில் 56 ஹெக்டோ், திருப்புவனம் வட்டாரத்தில் 11 ஹெக்டோ் என 50 சதவீதத்துக்கும் குறைவாகவே பயிா்க் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

விடுபட்ட அனைத்து விவசாயிகளும் வருகிற 15-ஆம் தேதிக்குள் முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல் சான்று, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ளலாம்.

காப்பீடு செய்யும்போது, விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயா், புலம் எண், பரப்பு, வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைச் சரிபாா்த்து, காப்பீட்டுக்கான ரசீதைப் பெற்றுக் கொள்ளலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com