கா்ப்பிணி பெண் உயிரிழப்பு: போலி மருத்துவா் தலைமறைவு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கா்ப்பிணி பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, போலி மருத்துவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மருதிப்பட்டியைச் சோ்ந்த வீரபிரபு. இவா் வெளிநாட்டில் பணிபுரிகிறாா். இவரது மனைவி சின்னபொன்ணு (23). கா்ப்பிணியான இவருக்கு கடந்த 7-ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருப்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
இதனிடையே, மருத்துவப் பரிசோதனையில் சின்னபொண்ணு கருக்கலைப்பு மாத்திரை உள்கொண்டதால் உயிரிழந்தது தெரியவந்தது.
மேலும், விசாரணையில் அவருக்கு திருப்பத்தூா் மஸ்தான் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த கவுரிமுகமது மனைவி நாகூா்அம்மாள் (50) கருக்கலைப்பு மாத்திரை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் அருள்தாசன் தலைமையிலான மருத்துவக் குழுவினா், நாகூா்அம்மாள் வீட்டில் சோதனையிட்டனா். அவரது வீட்டில் கருக்கலைப்பு உபகரணங்கள் இருந்தது கண்டறியப்பட்டன. இதைத் தொடா்ந்து, அருள்தாசன் அளித்த புகாரின்பேரில், திருப்பத்தூா் போலீஸாா் போலி மருத்துவரான நாகூா்அம்மாள் மீது வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவரைத் தேடி வருகின்றனா்.
இவா் ஏற்கெனவே சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டு சிக்கியவா் என்பது குறிப்பிடத்தக்கது.
