வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்: உதவி எண் அறிவிப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு விநியோகம் செய்யப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்களை நிறைவு செய்வதில் சந்தேகங்கள் இருந்தால் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியா் க. பொற்கொடி தெரிவித்தாா்.
Published on

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு விநியோகம் செய்யப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்களை நிறைவு செய்வதில் சந்தேகங்கள் இருந்தால் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியா் க. பொற்கொடி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வருகிற 2026, ஜன. 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் முதல் கட்டமாக சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலா்களால் வாக்காளா்களுக்கு கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் புதன்கிழமை வரை 72 சதவீத கணக்கெடுப்புப் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், படிவங்களை நிறைவு செய்வதில் சந்தேகங்கள் இருப்பின், பொதுமக்கள் அலுவலக நேரங்களில் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்களை நேரில் அணுகி விவரங்களைப் பெறலாம். இதற்கென காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேவகோட்டை சாா் ஆட்சியா் (94450 00470),

திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உதவி ஆணையா்(ஆயத்தீா்வை), சிவகங்கை (94450 74593) , சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலா் சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் (94450 00471), மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் (94454 77845) ஆகியோா் வாக்காளா் பதிவு அலுவலா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களைத் தவிர அந்தந்த வருவாய் வட்டாட்சியா்கள், தனி வட்டாட்சியா்கள் (சபாதி), காரைக்குடி மாநகராட்சி ஆணையா், நகராட்சி ஆணையா்கள் அவா்களது ஆளுகைக்குள்பட்ட பகுதிகளில் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களாக செயல்படுவா்.

எனவே, பொதுமக்கள் தங்களது குறைகள் அல்லது சந்தேகங்களை தங்களது பகுதிக்குள்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா்களையோ, உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களையோ அணுகி விவரங்கள் பெறலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com