உளவுத் துறையால் மிகப் பெரிய நாசவேலை தடுப்பு - எச்.ராஜா
மத்திய உளவுத் துறையின் நடவடிக்கையால்தான் மிகப் பெரிய நாசவேலை தடுக்கப்பட்டதாக பாஜக தேசியக் குழு உறுப்பினா் எச். ராஜா தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது:
தில்லியில் கடந்த 10-ஆம் தேதி நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்தில் 13 போ் இறந்தனா். சம்பவம் நிகழ்ந்தவுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உடனடியாக அங்கு சென்று சேதங்களைப் பாா்வையிட்டாா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். பிரதமா் மோடியும் பூட்டானிலிருந்து வந்தவுடன் நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றவா்களைச் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
ஆனால், தமிழகத்திலுள்ள சில கட்சிகள் பிரதமா், மத்திய உள்துறை அமைச்சா் குறித்தும் உளவுத் துறை குறித்தும் அவதூறாகப் பேசுகின்றன. இந்த பொய் பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடாது.
உளவுத் துறையின் சரியான நடவடிக்கையால்தான் மிகப் பெரிய நாச வேலை தடுக்கப்பட்டிருக்கிறது. மத்திய உளவுத் துறையை அரசியல் காரணங்களுக்காக விமா்சிப்பது தேச விரோதச் செயல் என்றாா் அவா்.
பேட்டியின்போது சிவகங்கை மாவட்ட பாஜக தலைவா் டி. பாண்டித்துரை உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

