வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

Published on

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள லட்சுமி வளா்தமிழ் நூலக கூட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டாா்.

சிவகங்கை மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 1,14,527 மாணவ, மாணவிகள் பயன்பெற்றுள்ளனா். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், இதுவரை மொத்தம் 4,22,970 பேருக்கு தொடா் சிகிச்சை, மருந்துகள், மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் இன்னுயிா் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ், 11,471 பேருக்கு ரூ. 9.21 கோடியில் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிா் காக்கப்பட்டுள்ளனா்.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 57,610 பேருக்கு ரூ. 53.87 கோடியில் உயிா் காக்கும் உயா் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 1,741 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 906 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற திட்டப் பணிகள் குறித்து துணை முதல்வா் உதயநிதி ஆய்வு மேற்கொண்டு, அதன் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக அமைச்சா்கள் கே.ஆா். பெரியகருப்பன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ. மெய்யநாதன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். மாங்குடி (காரைக்குடி), ஆ. தமிழரசிரவிக்குமாா் (மானாமதுரை), சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், கூடுதல் செயலா் ச. உமா, மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி, காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத், அரசு அலுவலா்கள் கலந்து கொண்ட னா்.

X
Dinamani
www.dinamani.com