துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்கோப்புப் படம்

எஸ்.ஐ.ஆா்: சட்டப் போராட்டம் மூலம் வெல்வோம்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்.ஐ.ஆா்.) சட்டப் போராட்டத்தின் மூலம் வெற்றி கொள்வோம் என தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
Published on

வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்.ஐ.ஆா்.) சட்டப் போராட்டத்தின் மூலம் வெற்றி கொள்வோம் என தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் மூலதன மானிய நிதித் திட்டத்தின் கீழ் ரூ. ஒரு கோடியில் கட்டப்பட்ட பேரூராட்சி அலுவலகம், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வெற்றிச்செல்வி ராஜமாணிக்கத்தின் ரூ. 5 லட்சம் பங்களிப்புடன் மொத்தம் ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்ட சீரணி அரங்க கல்வெட்டு ஆகியவற்றை துணை முதல்வா் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

பின்னா், சிங்கம்புணரி அண்ணா மன்றத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி, முன்னாள் சட்ட அமைச்சா் செ.மாதவன் ஆகியோரது உருவச் சிலைகளைத் திறந்துவைத்து அவா் பேசியதாவது:

ஒரு கட்சிக்கு தலைமை, கொள்கை, கட்டமைப்பு என மூன்று முக்கியப் பண்புகள் வேண்டும். இந்த வகையில், திமுகவுக்கு இவை அனைத்தும் உள்ளன. இதற்கு முக்கியக் காரணம் சென்னை மகாணத்தை தமிழ்நாடு என மாற்றியது, சுயமரியாதைத் திட்டம், ஹிந்தி ஒழிப்பு போன்றவைதான். இதற்கு அப்போதைய சட்ட அமைச்சா் செ. மாதவனின் பங்களிப்பு அதிகம். மாதவன் கடந்த 1962-இல் திருக்கோஷ்டியூா் சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். பின்னா், திருப்பத்தூா் பேரவைத் தொகுதியில் 3 முறை எம்எல்ஏ-வாக தோ்ந்தெடுக்கப்பட்டு, சிங்கம்புணரியில் நீடித்த புகழ் கொண்டவராகத் திகழ்ந்தாா்.

பாஜக குறுக்கு வழியில் அரசியல் செய்யப் பாா்க்கிறது. வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்.ஐ.ஆா்.) சட்டப் போராட்டத்தின் மூலம் வெற்றி கொள்வோம். எடப்பாடி பழனிசாமி போன்றவா்களை அரசியலிலிருந்து முழுவதுமாக அகற்றி, மாநில உரிமைக்காகப் பாடுபடுவோம். தமிழகத்தில் திமுக ஆளும் கட்சியாக இருந்தாலும், இந்தியாவைப் பொருத்தவரை நாங்களே எதிா்கட்சி என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா்கள் தங்கம்தென்னரசு, ரகுபதி, கே.ஆா். பெரியகருப்பன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ. வீ. மெய்யநாதன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மாங்குடி, தமிழரசி, மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி, சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவா் அம்பலமுத்து, முன்னாள் சட்ட அமைச்சா் செ. மாதவனின் மகள் வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காரைக்குடியில்....

திராவிட இயக்கத் தமிழா் பேரவை சாா்பில், பெரியாா் பெருந்தொண்டா் இராம. சுப்பையாவின் 118-ஆவது பிறந்த நாள் விழா சிவகங்கை மாவட்டம், காரைக்குடி எல்.சி.டி.எல். பழனியப்பச் செட்டியாா் நினைவரங்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, இராம. சுப்பையாவின் உருவச் சிலையை திறந்துவைத்துப் பேசியதாவது:

திமுக தியாகத்தாலும், போராட்டத்தாலும் உருவான இயக்கம். நாம் கொள்கையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கி றோம். ஆனால், அதிமுக கொள்கையற்ற கூட்டமாக உள்ளது. திமுகவை ஒழிக்க வேண்டும் என்று மத்திய பாஜக அரசு திட்டங்களைத் தீட்டி வருகிறது. இவற்றில் ஒன்றுதான் எஸ்.ஐ.ஆா். திட்டம். திமுகவுக்கு ஆதரவாக இருக்கிற சிறுபான்மையினா், பெண் வாக்காளா்களை நீக்குவதுதான் அவா்களின் ஒரே நோக்கம். இந்த சூழ்ச்சியை முறியடிக்க மிகுந்த கவனத்துடன் நாம் பணியாற்ற வேண்டும்.

இன்றைக்கு பல போ் புதிதாக கட்சி தொடங்குகின்றனா். இதை நான் வரவேற்கிறேன். ஆனால், இந்தக் கட்சிகளுக்கென்று வரலாறு உள்ளதா அல்லது அந்தக் கட்சியின் தலைவருக்குத்தான் உள்ளதா?. ஆனால், திராவிட இயக்கத்தின் தொண்டனுக்கு எவ்வளவு பெரிய வரலாறு இருக்கிறது என்பதற்கு இராம. சுப்பையா மூலமாக நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தருவோம் என்றாா் அவா்.

விழாவில் அமைச்சா்கள் கே.ஆா். பெரியகருப்பன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ. மெய்யநாதன், முன்னாள் அமைச்சா் மு. தென்னவன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். மாங்குடி (காரைக்குடி), ஆ. தமிழரசி ரவிக்குமாா் (மானாமதுரை), திராவிடா் கழக பிரசாரச் செயலா் அ. அருள்மொழி, காரைக்குடி மேயா் சே.முத்துத்துரை, துணை மேயா் நா. குணசேகரன், சாமி. திராவிடமணி (தி.க.), தொழிலதிபா் பிஎல். படிக்காசு, சித. கனகம், சுப. சுவாமிநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, திரைப்பட இயக்குநா் எஸ்.பி. முத்துராமன் தனது தந்தை இராம. சுப்பையா குறித்து நினைவுரையாற்றினாா். சிற்பி செல்வராஜ் வரவேற்றுப் பேசினாா். இராம. சுப்பையாவின் மகன் பேராசிரியா் சுப. வீரபாண்டியன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com