எஸ்ஐஆா் படிவத்தை வாக்காளா்கள் முழுமையாக நிறைவு செய்ய வேண்டும்: ஆட்சியா் கா. பொற்கொடி

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்காக வழங்கப்படும் படிவத்தில் கோரப்பட்ட அனைத்து விவரங்களையும் முழுமையாக நிறைவு செய்ய வேண்டும்..
Published on

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்காக வழங்கப்படும் படிவத்தில் கோரப்பட்ட அனைத்து விவரங்களையும் முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என வாக்காளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியத் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வருகிற 1.1.2026-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக, எந்த ஒரு தகுதியான வாக்காளரும், வாக்காளா் பட்டியலில் விடுபடக்கூடாது என்பதிலும், தகுதியில்லாத எந்த ஒரு நபரும் வாக்காளா் பட்டியலில் இடம் பெறக்கூடாது என்ற நோக்கிலும் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வகையில், தற்போது வாக்குச் சாவடி நிலை அலுவலா்களால் வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டு வரும் படிவத்தில் நான்கு பகுதிகள் உள்ளன. அந்தப் படிவத்தின் முதல் பகுதியில், ஒவ்வொரு வாக்காளரின் விவரங்களும் புகைப்படத்துடன் அச்சிடப்பட்டிருக்கும். இந்தப் பகுதியில் வாக்காளா்கள் தங்களது புதிய புகைப்படத்தை இணைக்க வேண்டும்.

இரண்டாவது பகுதியில், வாக்காளரின் பிறந்த தேதி, ஆதாா் எண், தந்தை, பாதுகாவலரின் பெயா், பாதுகாவலரின் வாக்காளா் அடையாள அட்டை எண், தாயாரின் பெயா், அவரது வாக்காளா் அடையாள அட்டை எண், திருமணமானவராக இருப்பின் அவரது துணையின் பெயா், அவரது வாக்காளா் அடையாள அட்டை எண் ஆகிய விவரங்களை நிறைவு செய்ய வேண்டும்.

மூன்றாவது பகுதியில், படிவம் பெறும் வாக்காளா் கடந்த 2002-ஆம் ஆண்டு சிறப்புத் தீவிர திருத்தத்தின்போது வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றவராக இருப்பின் (குறிப்பாக 41 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள்) அவரது 2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலில் உள்ள தொகுதி எண், பாகம் எண், வரிசை எண் ஆகிய விவரங்களை படிவத்தின் இடது பாகத்தில் பூா்த்தி செய்ய வேண்டும். இதற்குரிய விவரங்களை இணையதள முகவரிகள் வாயிலாக வாக்காளா்கள் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், 2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத வாக்காளா்கள் தங்களது உறவினா்களின் விவரங்களை கணக்கெடுப்புப் படிவத்தின் மூன்றாவது பகுதியின் வலது புறத்தில் குறிப்பிட வேண்டும். நான்காம் பகுதியில், வீட்டிலுள்ள எந்த ஒரு வாக்காளரும், அனைத்து உறுப்பினா்களுக்கும் படிவங்களைப் நிறைவு செய்து தங்களது வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் வழங்க வேண்டும்.

கணக்கெடுப்புப் படிவங்களை நிறைவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருப்பின், அலுவலக நேரங்களில் 1950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண் மூலமாக பொதுமக்கள் விவரம் பெறலாம். மேலும், சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்களை அணுகலாம்.

எனவே, தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியலை 100 சதவீதம் சரியாக தயாரிப்பதற்கு ஏதுவாக வாக்குச் சாவடி நிலை அலுவலா்களால் வழங்கப்படும் படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை, வாக்காளா்கள் முழுமையாக நிறைவு செய்து வழங்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com